பொதுமக்களிடம் ரூபாய் 9 3/4 லட்சம் வைப்பு தொகை வைத்து மோசடி: தனியார் மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தல பத்தாண்டு சிறை – கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பு
கோவையில் பொது மக்களிடம் இருந்து திரட்டிய ரூபாய் 9 லட்சத்தி 70 ஆயிரம் வைப்பு நிதி தொகையை ஏமாற்றிய மில் இயக்குனர்கள் 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கடந்த 1995 ஆம் ஆண்டு இயங்கிய ஒரு தனியார் மில் சார்பில் பொது மக்களிடம் இருந்து வைப்புத் தொகை திரட்டப்பட்டது. அப்பொழுது பொதுமக்கள் வழங்கும் ரூபாய் ஒரு லட்சம் வைப்பு தொகைக்கு ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு வழங்கப்படும். என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து வைப்பு தொகை திரும்பி தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது இதனை நம்பி கோவை, திருப்பூரை சேர்ந்த ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் அந்த மில் நிறுவனம் சார்பில் உறுதியளித்தபடி வைப்புத் தொகை திரும்பி அளிக்கப்படவில்லை இதனிடையே கடந்த 2000 ஆம் ஆண்டு அந்த நிறுவனம் நலிவடைந்த நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதில் முதலீடு செய்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராமன், செல்வராணி, ரவிச்சந்திரன், பெருமாள் நிறுவனத்தை ஏற்று நடத்தினர். மேலும் அந்த மில்லில் இயக்குனர்களாக இருந்தனர். மேலும் பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை திருப்பித் தருவதாகவும் உறுதியளித்தனர். ஆனால் அவர்கள் வாக்களித்தபடி பொதுமக்கள் முதலீடு தொகையை திரும்பி தரப்படவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இது குறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பொதுமக்கள் 11 பேரிடமிருந்து பெறப்பட்ட ரூபாய் 9 லட்சத்து 70 ஆயிரம் தொகையை திரும்பி தராமல் ஏமாற்றியது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜெயராமன், செல்வராணி, பெருமாள், ரவிச்சந்திரன் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஐந்து பேர் இறந்து விட்டனர். இது தொடர்பான வழக்கு கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பின்னர் கடந்த ஆண்டு இந்த வழக்கு அங்குள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு நீதிமன்றம் டென்பிட் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடைபெற்றது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.எம்.ரவி பொதுமக்கள் வைப்புத் தொகையை திரும்பி தராமல் ஏமாற்றியதற்காக இயக்குனர்கள் ஜெயராமன், பெருமாள் ஆகியோருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூபாய் 26 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மீதமுள்ளவர்கள் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.