ஊட்டி: நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மேலாளராக சாந்திபிரியா(34) என்பவர் பணியாற்றி வந்தார். அவருடன் நகை மதிப்பீட்டாளராக ராஜூ(32), கேசியராக நந்தினி(30), கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக விஜயகுமார்(30) பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இவர்கள் அனைவரும் சேர்ந்து, கடந்த 2021 மார்ச் 9-ந்தேதி முதல் 2021 செப்டம்பர் 1-ந்தேதி வரையிலான கால கட்டத்தில் இந்த நிறுவனத்தில் உள்ள 81 வாடிக்கையாளர்களின் கடன் கணக்குகளிலிருந்து ஒரிஜனல் தங்க நகைகளை எடுத்து விட்டு, அதற்கு மாற்றாக போலி நகைகளை வைத்துள்ளனர்.
அதில் 43 பாக்கெட்டுகளில் இருந்த அசல் நகைகளை ஏற்கனவே உள்ள வேறு வாடிக்கையாளர்களின் பெயர்களில் போலியான ஆவணங்களை தயாரித்து, அடகு வைத்து 98 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து தனியார் நிறுவனம் சார்பில் ஊட்டியில் உள்ள மாவட்ட குற்ற பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் மேலாளர் சாந்தி பிரியா, நகை மதிப்பீட்டாளர் ராஜூ, கேசியர் நந்தினி, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் விஜயகுமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களை பிடிப்பதற்கு தனிப்படையும் அமைக்கப்பட்டது. இதற்கிடையே தனிப்படை போலீசார் கடந்த ஜனவரி மாதம் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நகை மதிப்பீட்டாளர் ராஜூ, கேஷியர் நந்தினி, கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் விஜயகுமார் ஆகியோரை கைது செய்தனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டதை அறிந்ததும் மேலாளர் சாந்தி பிரியா தலைமறைவாகி விட்டார். மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அம்சவேணி தலைமையிலான தனிப்படை போலீசார் சாந்தி பிரியாவை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர். இந்த நிலையில் சாந்திபிரியாக ஊட்டியில் பதுங்கி இருப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் விரைந்து சென்று, சாந்திபிரியாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மோசடி வழக்கில் கைதான சாந்திபிரியாவின் தந்தை மஞ்சூர் அருகே உள்ள பிக்கட்டி பேரூராட்சி தி.மு.க. செயலாளராக உள்ளார்.