மருத்துவ நிபுணர்களின் ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சிக்கு மேகாலயாவுக்கு ஆதரவளிக்க தமிழ்நாடு அரசுடன் மேகாலயா அரசு, ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அறிவுப் பகிர்வு, திறன் மேம்பாடு மற்றும் சுகாதாரச் சேவையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்காக இரு மாநிலங்களுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இரு மாநிலங்களுக்கு இடையே செய்யப்படும் முதல் மருத்துவக் கூட்டாண்மை ஆகும்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மேகாலயா மாநிலத்தில் பணியாற்றும் அரசு டாக்டர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது தொடர்பாக அந்த மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறையுடன் தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மேகாலயா மாநில சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பி.கே.சங்மா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேகாலயா மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் ஜேம்ஸ் பி.கே.சங்மா மற்றும் அவரது குழுவினர் 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சிறப்பு மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் திட்டங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டு, அதனை அவர்களது மாநிலத்தில் செயல்படுத்த உள்ளனர்.
மக்களை தேடி மருத்துவம் மற்றும் இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மற்றும் தமிழகத்தில் சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளையும் மேகாலயா குழுவினர் பார்வையிட உள்ளனர்.
மேலும், தமிழகத்தில் உள்ள உயர் மருத்துவ சேவைகளான ‘ரோபாடிக்’ அறுவை சிகிச்சை, புற்றுநோய் உயர் கதிர்வீச்சு சிகிச்சை போன்ற திட்டங்களையும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக கிடங்கு ஆகியவற்றையும் அவர்கள் பார்வையிட உள்ளனர்.
மேகாலயாவில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தை நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி ஆகிய சிறப்பு பயிற்சிகள் அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது, என்று கூறினார்.
இதையடுத்து பேசிய மேகாலயா அமைச்சர் ஜேம்ஸ் பி.கே.சங்மா, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இரு மாநிலங்களும் பயனடைய முடியும். மேகாலயா மாநிலத்தில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் மற்றும் வசதிகளை மேம்படுத்த இந்த ஒப்பந்தம் உதவிகரமாக அமையும். இந்தியாவிலேயே மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையின் செயல்பாட்டில் தமிழகம் சிறந்து விளங்குகிறது, என்று கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், தேசிய சுகாதார குழும இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதீஷ், மேகாலயா மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் சம்பத்குமார், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.