கோவை வடவள்ளி தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விஷ்வ தர்ஷினி (வயது 42). சொந்தமாக தொழில் செய்து வருகிறார்.
இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும் எனது முதல் கணவருக்கும் விவகாரத்து ஏற்பட்டது. அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து வடவள்ளி காந்தி நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டேன். அப்போது நான் எனது 2-வது கணவருக்கு ரூ.4 லட்சம் மற்றும் 20 பவுன் தங்க நகைகளை கொடுத்தேன். பின்னர் சில நாட்கள் கழித்து நான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அவர் தரவில்லை. சம்பவத்தன்று நான் தொண்டாமுத்தூர் ரோட்டில் சென்று கொண்டு இருந்தேன். அங்கு எனது 2-வது கணவர், அவரது தோழியுடன் வந்து கொண்டு இருந்தார்.
இதனை பார்த்த நான் கணவரை நிறுத்தி பணத்தை கேட்டேன். அதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அந்த அவர் எனது விலை உயர்ந்த செல்போனை பறித்து சரமாறியாக தாக்கினார். பின்னர் மிரட்டி விட்டு சென்றார். எனவே எனது 2-வது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் விஷ்வ தர்ஷினியின் 2-வது கணவர் ரமேஷ் மற்றும் அவரது தோழி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.