கோவை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்கு பிரசவத்திற்காக கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் கோவையை அடுத்த அன்னூரை சேர்ந்த பெண்ணிற்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று மதியம் அந்த ஆண் குழந்தையை தொட்டிலில் வைத்து விட்டு அந்த பெண் வெளியே சென்றார். அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென்று அந்த பச்சிளம் ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே செல்ல முயன்றார். இதை பார்த்து சந்தேகம் அடைந்த ஆஸ்பத்திரி காவலாளிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களிடம் அந்த பெண், அந்த குழந்தை தன்னுடையது என கூறியுள்ளார். இதனிடையே வெளியே சென்ற குழந்தையின் தாய் திரும்பி வந்தார். அவர், தொட்டிலில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார்.
மேலும் அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் தனது குழந்தையை காணவில்லை என்று கூறினார். இதை அறிந்த காவலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விரைந்து செயல்பட்டு தீவிர தேடி குழந்தையை தூக்கி சென்ற அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் குழந்தையை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண் முன்னுக்கு பின் முரணாக தகவலை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர். அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. அந்த பெண்ணை சுற்றி போலீசார் மற்றும் பொது மக்கள் நிற்பதை பார்த்து ஒரு மூதாட்டி ஓடி வந்தார். அவர் போலீசாரிடம் அந்த பெண் எனது மகள் எனவும் தாங்கள் கோவை உடையாம்பாளையத்தை சேர்ந்தவர்கள், எனது மகள் பெயர் ஆரோக்கியமேரி (வயது 32) என்றும், அவர் கடந்த 15 வருடமாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் அவர் நேற்று ஆஸ்பத்திரியில் ஒரு தாய் தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்த போது அவரிடம் சென்று அந்த குழந்தை தன்னுடையது என கூறி அவரிடம் இருந்து குழந்தையை பிடுங்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் ஆரோக்கியமேரி துரத்தி விட்டுள்ளனர். அதன்பின்னர் தான் அவர் பிரசவ வார்டில் உள்ள குழந்தையை தூக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஆரோக்கியமேரியை அவரது தாயாரிடம் ஒப்படைத்து, இனி இவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்ளும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். கோவை அரசு ஆஸ்பத்திரியில் பச்சிளம் குழந்தையை தூக்கி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.