சிறுமியின் வழக்கில் 600 பக்கங்களை கொண்ட சாட்சியங்களின் வாக்குமூலம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இதில் மொத்தம் 96 பேர் சாட்சியம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
சென்னை சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட வழக்கில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதில், தன் உறவினர் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகிறார் என்றும், கட்சி பிரமுகர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகிய இருவரும் தன்னை அடிக்கடி பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமி கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர், பல பாலியல் தரகர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் காவல் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட பலர் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். சிறுமி அளித்த புகாரின் பேரில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் 22 பேரை கைது செய்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இவ்வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட மாரீஸ்வரன் என்பவர் இறந்துபோன நிலையில், மற்ற 21 பேர் மீது விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில்நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 7 பெண்கள் உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், பாஜக பிரமுகர் ராஜேந்திரன், காவல் ஆய்வாளர் புகழேந்தி உட்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.