பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீட்டிப்பு-தமிழக அரசு உத்தரவு..!

மிழ்நாட்டில் பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக நீட்டித்த உத்தரவு நடப்பு செப்டம்பர் முதல் அமல் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து பகுதிநேர ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயது நிர்ணயம் செய்யப்பட்டது.

கடந்த 10ம் தேதி நடைபெற்ற ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அளித்த வாக்குறுதிப்படி ஓய்வுபெரும் வயது அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் சுமார் 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இருப்பினும் பல காரணங்களால் பணியில் அமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் 12,000 பேர் பணியில் இருந்து விலகினர்.

அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தொழிற்கல்வி, தையல், இசை, ஓவியம், கணினி அறிவியல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நோக்கத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கும் அனுபவத்தின் அடிப்படையில் மாதம் ரூ. 10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கு போல, தங்களுக்கும் ஓய்வு வயது 60 ஆக நீட்டிக்க வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர். முன்னதாக இவர்களுக்கும் பணி ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, இதனை பரிசீலனை செய்த பள்ளி கல்வித்துறை பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக மாற்றப்படும் என அறிவித்தது. அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாடு அரசு பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு வயதாக அமல்படுத்தியது.