கோவை பேரூர் தீத்திப்பாளையத்தை சேர்ந்தவர் கலைசெல்வன் (வயது 65). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று அவர் தனது மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தி உள்ளே சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்த போது அவரது மொபட் காணவில்லை. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கலைசெல்வன் பேரூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
வடவள்ளி அஞ்சனூரை சேர்ந்தவர் சந்திரன் (27). கூலி தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் வடவள்ளி சிறுவாணி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார்.
இதேபோன்று பேரூர் தீத்திப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (48). விவசாயி. சம்பவத்தன்று அவர் தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது ஒரு சிறுவன் அங்கு இருந்த ஒரு கிலோ காப்பர் வயரை திருடி கொண்டு இருந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது நண்பரை அழைத்து அவரது உதவியுடன் அந்த சிறுவனை மடக்கி பிடித்தார். பின்னர் அந்த சிறுவனை பேரூர் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அந்த சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கோவை தொண்டாமுத்தூர் வஞ்சியம்மன் நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், இவர் கலைசெல்வனின் மொபட், சந்திரனின் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திருடியதும், அந்த பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அந்த 17 வயது சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.