கோவை:
தமிழகம் முழுவதும் 26 சார் பதிவாளர்கள் உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். சார் பதிவாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2010-11 முதல் 2022-23 வரை பணிமூப்பு தொடர்பாக திருத்திய பட்டியலை தமிழ்நாடு பதிவுத்துறை வெளியிட்டது.
இதில் கோவை சிங்காநல்லூர், கிணத்துகடவு,மேட்டுப்பாளையம் உட்பட 26 சார் பதிவாளர்கள் உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டனர். 2016-17 ஆண்டுக்கான பட்டியலில் பலர் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருந்ததுடன் முதுநிலை இறக்கமும் செய்யப்பட்டதாக புகார் வந்தது.
இதில் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை திடீர் ஆய்வில் சம்பந்தப்பட்டவர்களை கூர்நோக்கு அற்ற இடத்தில் பணி நியமனம் செய்யவும் மாவட்ட பதிவாளர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டது. 26 சார்பதிவாளர்களையும் உடனடியாக பணியில் இருந்து விடுவித்து புதிய பணியிடத்தில் பணிக்கு சேர அறிவுரை வழங்கும்படி மாவட்ட பதிவாளர்களுக்கு தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.