கோவையில் பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள் வீடுகள் மற்றும் கடைகள் சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த மாதம் 22-ந் தேதி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன தொடர்ந்து குனியமுத்தூர் மற்றும் டவுன்ஹால் பகுதியில் அரசு பஸ் கண்ணாடி கல் வீசி உடைக்கப்பட்டன. அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்கள் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் அரசு பஸ் கண்ணாடி உடைத்த வழக்கில் கோவை குனியமுத்தூர், ரத்தினபுரி மற்றும் வெறைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையங்களில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை எஸ்டிபிஐ மற்றும் பி எப் ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கைதானவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இன்று கைதானவர்களை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த பெட்ரோல் குண்டு வீச்சில் மேலும் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என தெரியவரும்.