சென்னை: ஓபிஎஸ் அனுமதித்தால் ரூ.41 ஆயிரம் கோடி தொடர்பான ரகசியத்தை வெளியிடுவேன் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தரப்புக்கு முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் நேற்று முன்தினம், சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தை கட்சி ரீதியாக 3 ஆக பிரித்து மாவட்ட செயலாளர்களை ஓபிஎஸ் நியமித்துள்ளார். கட்சி வரலாறு தெரிந்தவர்கள், தங்கமணியால் கட்சியிலிருந்து ஒதுக்கப்பட்ட, பல காலமாக கட்சியில் பல்வேறு பொறுப்பில் இருந்தவர்கள், புதிய நிர்வாகிகளை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். அதை பார்த்து முன்னாள் அமைச்சர் தங்கமணி கவலையும், அச்சமும் அடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து தங்கமணி பொய்யான தகவல்களை பேசி வருகிறார்.
ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது, அவரை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் சந்தித்தனர். அப்போது, மீதம் இருக்கும் காலத்தில் பழனிசாமி முதல்வராக இருக்கட்டும். அடுத்த முதல்வர் நீங்கள்தான் என ஓபிஎஸ்ஸிடம் கூறியவர் தங்கமணி. ஆட்சியை கவிழ்க்க டிடிவி தினகரன் தீர்மானம் கொண்டுவந்தபோது, ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்த ஓபிஎஸ்ஸூக்கு அவர்கள் நன்றியுடன் இருந்ததில்லை.
ஜெயலலிதா நிதி தொடர்பாக பேச டெல்லி சென்றபோதெல்லாம் ஓபிஎஸ்ஸை உடன் அழைத்து செல்வார். ஆனால் பழனிசாமி ஒருநாளும் ஓபிஎஸ்ஸை அழைத்து செல்லவில்லை. பிரதமர், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் அழைத்தும், தனியாக சென்று சந்தித்தவர்தான் பழனிசாமி. பல அவமானங்களை ஓபிஎஸ் தாங்கிக்கொண்டிருந்தார். அவரை திட்டமிட்டு கட்சியில் இருந்து வெளியேற்றினர். விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ஓபிஎஸ் நடத்த உள்ளார். தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர். நீதி, நியாயம் என அனைத்தும் அவர் பக்கம் உள்ளன. தங்களை காப்பாற்றிக்கொள்ள விரும்பும் சிலபேர் இந்த கட்சியை கையில் வைத்திருப்பதன் மூலமாகதான் வழக்குகளில் இருந்து தப்பிக்க முடியும் என்ற நோக்கத்தில் ஒற்றைத் தலைமை என்ற உத்தியை பயன்படுத்துகின்றனர்.
ஒருவரை ஒதுக்கி வைத்துவிட்டு, தான் மட்டுமே முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்கும் காரணத்தால்தான் இந்த கட்சி பிளவுபட்டுக் கொண்டே இருக்கிறது. வழக்கில் சிக்கி விடாமல் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேரம் பேசிய உண்மைகள், யார் திமுகவுடன் ரகசிய உறவு வைத்திருக்கிறார்கள், யார் திமுகவுக்கு சாதகமாக இருக்கிறார்கள் என்பது பற்றி விரிவான விளக்கங்கள் வரும் மாதங்களில் தெரியவரும். நவம்பர் 21-ம் தேதிக்கு முன்பாகவே அந்த தகவல்கள் வெளிக்கொண்டுவரப்படும். ஓபிஎஸ் அனுமதி அளித்தால் ரூ.41 ஆயிரம் கோடி ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன். அப்போது வெட்டவெளிச்சமாக இந்த நாட்டு மக்களுக்கு தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.