கேரளத்தில் தமிழ் பெண் உள்பட 2 பேர் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பல்வேறு அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த பெண் 49 வயதான ரோஸ்லி மற்றும் தமிழ்நாட்டின் தர்மபுரியை சேர்ந்த 52 வயதான பத்மா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு நரபலி கொடுக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் ஹீலர் பகவல் சிங் அவரின் மனைவி லைலா மற்றும் வழக்கின் முதன்மை குற்றவாளியான ராஷித் என்ற முகம்மது ஷபி ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூவரையும் அக்டோபர் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க கொச்சி நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
வழக்கின் முதன்மை குற்றவாளி ஷபி , தன்னை மலையாள மாந்தீரிகன் போல் காட்டிக் கொண்டுள்ளார். இளம்பெண் பெயரில் போலி முகநூல் கணக்கு ஒன்றை தொடங்கி வாயிலான, ஹீலர் பகவல் சிங் மற்றும் லைலா ஆகியோரின் குடும்பத்துக்கு பழக்கமாகியுள்ளார்.
அப்போது அந்தக் குடும்பத்துக்கு மாந்தீரிகத்தில் நம்பிக்கை உள்ளது என்பதை அறிந்துகொண்டார். பின்னர் அவர்களிடம் பெண்ணை நரபலி கொடுத்தால் வறுமை நீங்கி செல்வம் கிடைக்கும் என நம்ப வைத்துள்ளார்.
தொடர்ந்து இந்தக் கொடுமை அறங்கேறியுள்ளது. முன்னதாக கடத்தப்பட்ட பெண்கள் இருவருக்கும் செக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு அவர்களின் தலை மற்றும் உடலின் மற்ற பாகங்களை வெட்டி நரபலி கொடுத்துள்ளனர். தொடர்ந்து இருவரின் உடலின் சில பாகங்களை சமைத்து சாப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் போலீசாரின் பிடியில் மூவரும் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்த வழக்கு குறித்து கொச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் சி.ஹெச். நாகராஜு, ‘ஷபி மீது ஏற்கனவே ஏமாற்றுதல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஒருமுறை 75 வயது மூதாட்டி ஒருவரை ஷபி பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அப்போது, மூதாட்டியின் அந்தரங்க பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
தற்போது ஷபி உள்ளிட்ட மூவரிடமும் விசாரணை நடந்து வருகிறது’ என்றார். நரபலி கொடுக்கப்பட்ட ரோஸ்லி ஜூன் 6ஆம் தேதியும், பத்மா செப்டம்பர் 26ஆம் தேதியும் கடத்தப்பட்டுள்ளனர்.
இருவரும், கடத்தப்பட்ட 24 மணி நேரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பத்மாவின் குடும்பத்தினர் கொடுத்த காணாமல் போன வழக்கை போலீசார் விசாரித்து வந்த போது இந்த கொலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
தமிழ்நாட்டின் தர்மபுரியைச் சேர்ந்த பத்மா கொச்சியில் வசித்து வந்தார். அவர் காணாமல் போன ஒரு நாளுக்குப் பிறகு, செப்டம்பர் 27 அன்று அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கில், பத்மா ஷபியுடன் ஏற்கனவே தொடர்பில் இருந்துள்ளார் என்றும் போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஷபியுடன் ஈடுபட்டுவந்துள்ளார் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.