ரஷ்யாவுடன் நேரடியாக தொடர்பு கொண்டாலோ அல்லது நேரடியாக தாக்குதலில் நேட்டோ படைகள் ஈடுபட்டாலோ உலகப்பேரழிவு ஏற்படும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒருங்கிணைந்த சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து சென்ற உக்ரைன், ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கம் காட்டி, நேட்டோ அமைப்பில் சேர்வதற்கு ஆர்வம் செலுத்தியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமல்லாமல் உக்ரைனில் அரசுக்கு எதிராக, ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயல்படும் பகுதிகளையும் சுதந்திரம் பெற்றதாக ரஷ்ய அதிபர் புதின் அறிவித்தார். கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.
ஏறக்குறைய 5 மாதங்கள் வரை உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் கடும் போர் மூண்டது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை அழித்து, பொருளாதார ரீதியாக நாசப்படுத்தியது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போருக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா கடும்கண்டனம் தெரிவித்தன.
ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகள், ரஷ்யாவிலிருந்து இறக்குமதி தடை போன்றவற்றையும், சர்வதேச பணப்பரிமாற்றம் செய்யவும் தடை விதித்தன. இதனால் சர்வதேச சூழலில் இருந்து ரஷ்யா தனிமைப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில் கிரெம்ளின் நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் உக்ரைன் நாட்டின் 15 சதவீதப் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பதாக அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார். அதாவது உக்ரைனின், கேர்சன், ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டோன்ட்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டது. இந்தப்பகுதிகளின் நில எல்லைகளைக் காக்க ரஷ்யா எந்த நடவடிக்கையும் எடுக்கும் என அதிபர் புதின் நேற்று அறிவித்தார்
இதற்கு உக்ரைன் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோவில் தங்கள் நாட்டை சேர்க்க பணிகளை வேகப்படுத்தி விண்ணப்பத்தை விரைவுப்படுத்தினார்.
இதற்கிடையே உக்ரைனின் 15 சதவீதப் பகுதிகளை ரஷ்யா இணைத்து விட்டதாக அதிபர் புதின் அறிவித்ததற்கு நேட்டோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பு செல்லாது, சட்டவிரோதம் எனத் தெரிவித்துள்ளது.
இதனால் நோட்டோவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே புகைச்சல் உருவாகியுள்ளது. இந்த சூழலில் கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானா நகரில் நடந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஏதாவது ஒரு சூழலில் நேட்டோ படைகள், ரஷ்ய ராணுவத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டாலோ அல்லது தாக்குதலில் ஈடுபட்டாலோ அது பெரிய ஆபத்தில் முடியும், உலகம் இதுவரை சந்திக்காத மோசமான பேரழிவுகளைச் சந்திக்க நேரிடும். மிகவும் ஸ்மார்ட்டான நடவடிக்கை எனக் கூறுபவர்கள் இந்த செயலைச் செய்யமாட்டார்கள்.
உக்ரைனின் 4 நகரங்களை ரஷ்யா இணைத்துக் கொண்டுள்ளது. இந்த நகரங்களின் எல்லைகளை பாதுகாத்துக்கொள்ள, ரஷ்யா அணுஆயுதங்களை பயன்படுத்தக்கூடத் தயங்காது. இவ்வாறு புதின் எச்சரித்தார்.
இதற்கிடையே ஜி7 நாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் ஆகியவை செவ்வாய்கிழமை ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்தன. உக்ரைன் மீது அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தினால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தன.