சென்னை: பரபரப்பான சூழ்நிலைகளுக்கிடையே, தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கி கிடக்க, இன்று கூடவுள்ள சட்டசபை, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக சட்டசபையின் கடந்த கூட்டத்தொடர் மே 10-ந்தேதி நிறைவடைந்தது. அடுத்த சட்டசபை கூட்டத்தொடர் 6 மாதங்களுக்குள், அதாவது நவம்பர் 10-ந்தேதிக்குள் கூட்டப்பட வேண்டும்.
இந்த நிலையில், இந்த மாதம் 3-வது வாரத்தில் சட்டசபையை கூட்ட திட்டமிடப்பட்டு, அநேகமாக17-ந்தேதி முதல் சட்டசபை கூட்டப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்தது.
அந்தவகையில், இன்றைய தினம் தமிழக சட்டசபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்குகின்றது. கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவிற்கும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாத மறைவிற்கும் அனுதாபம் தெரிவிக்கும் விதமாக இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோவை தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவு பற்றியும் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.
பிறகு, சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.. பின்னர், 11 மணியளவில் அலுவல் ஆய்வு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.. இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. அநேகமாக 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கொரோனா பரவல் காலகட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அங்கு இடவசதி விசாலமாக இருந்ததால், இருக்கைகளுக்கு இடையே எம்எல்ஏக்கள் சென்று வருவதில் நெருக்கடி எதுவும் ஏற்படவில்லை.
இப்போது, வழக்கம்போல, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அரங்கத்தில் சட்டசபை அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன… மேலும், சட்டசபையில் நடைபெறும் சில நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதற்காக சில வசதிகளை செய்ய வேண்டியதிருந்ததால், எம்எல்ஏக்களின் இருக்கைகள் நெருக்கி போடப்பட்டன. இதனால் அவர்கள் சட்டசபையில் நடமாடுவதில் நெருக்கடி நிலவும் என்பதால் இதுபற்றி சட்டசபை செயலகத்தில் எம்எல்ஏக்கள் புகார் சொன்னார்கள்.
அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரும் உத்தரவிட்டார். இதுபற்றி பொதுப்பணித்துறையுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, இறுதியில், எம்எல்ஏக்கள் உட்காரும் இருக்கைகளில் ‘குஷன்’ குறைந்த அளவுள்ளதாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் உட்காரும்போது இருக்கையின் முன்பகுதியில் கூடுதல் இடைவெளி கிடைக்கும் என்பதால் எம்எல்ஏக்கள் நடமாட்டத்திற்கு இடையூறு ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.. அமைச்சர்கள் தவிர எம்எல்ஏக்களுக்கு முன்புள்ள “மைக்”குகள், அசைக்க முடியாதபடி உறுதியாக பொருத்தப்பட்டுள்ளதாம்.
இதனிடையே, அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் இடையே ஏற்பட்ட மோதலானது, சட்டசபையிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. அதிமுகவில் இருவருமே ஒருவரை ஒருவர் கட்சியிலிருந்து நீக்கிக் கொண்டது மட்டுமல்லாமல் இது பற்றி சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பி இருக்கின்றனர். எனவே, இன்று தொடங்கும் சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு சபாநாயகருடன் வாக்குவாதம் செய்து சட்டசபை புறக்கணிக்க கூடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருவதால் பரபரப்பு சூழ்ந்து கொண்டுள்ளது.