கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
அந்த கடையின் சூப்பர்வைசராக ஊட்டியை சேர்ந்த விஜய் ஆனந்த் (வயது 46) என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் நேற்று மதியம் விஜய் ஆனந்த் வழக்கம் போல் கடையில் வசூலான பணம் ரூ.10 லட்சத்தை எடுத்து தனது மொபட்டில் மேட்டுப்பாளையத்தில் உள்ள வங்கிக்கு சென்றார்.
அப்போது சிறுமுகை ரோடு ஆலாங்கொம்பு அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென விஜய் ஆனந்தை தடுத்து நிறுத்தினர். பின்னர் அந்த வாலிபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்தனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் ஆனந்த் மொபட்டை கீழே போட்டு சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் விஜய் ஆனந்திடம் பணத்தை பறிக்காமல் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த நிலையில் அந்த வழியாக சென்ற சிலர் பட்டப்பகலில் நடைபெற்ற அந்த சம்பவத்தை விடியோ எடுத்து உள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து விஜய் ஆனந்த் சிறுமுகை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் ஆனந்த்திடம் அரிவாளை காட்டி பணத்தை பறிக்க முயற்சி செய்த அந்த 4 வாலிபர்கள் யார்? அவர் பணம் எடுத்து வருவது அந்த வாலிபர்களுக்கு எப்படி தெரிந்தது ? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நிலையில் விஜய் ஆனந்திடம் கடந்த ஜூலை மாதம் இதே போன்று பணத்தைப் பறிக்க ஒரு கும்பல் முயற்சி செய்து உள்ளது. அந்த கும்பலுக்கும், நேற்று நடந்த சம்பவத்திற்கும் தொடர்பு உள்ளதா எனவும் போலீசார் விசாரணை நடத்தி அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.