கோவை உக்கடம் பில்லால் நகரை சேர்ந்தவர் மரியம் ரோஷினி (வயது 19). இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும் தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சுபானி (29) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு மாத குழந்தை உள்ளார். எங்களது திருமணத்தின்போது எனது பெற்றோர் எனது கணவருக்கு 7 பவுன் நகைகளை வரதட்சணையாக கொடுத்தனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக எனது கணவர் சரியாக வீட்டுக்கு வராமல் இருந்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த நான் விசாரித்தேன். அப்போது எனது கணவருக்கும் உக்கடம் புல்லுக்காடு அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 3 வருடங்களாக பழக்கம் இருந்து வந்ததும், கடந்த பிப்ரவரி மாதம் அந்தப் பெண்ணை அவர் இரண்டாவதாக திருமணம் செய்ததும் தெரியவந்தது. இதனால் என்னை கைக்கு குழந்தையுடன் தவிக்க விட்டு சென்றுவிட்டார். இது குறித்து நான் எனது கணவரிடம் கேட்டேன். அதற்கு அவர் என்னை பணத்திற்காக தான் திருமணம் செய்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் திருமணத்தின் போது எனது பெற்றோர் அளித்த நகையை திருப்பி கேட்டேன். அப்போது எங்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஆக மாறியது. இதில் ஆத்திரமடைந்த எனது கணவர் தகாத வார்த்தைகள் திட்டி என்னை தாக்கினார். எனவே என்னை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது சுபானியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.