கோவை போத்தனூரை அடுத்த மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் கலையரசி (வயது 55). இவர் வால்பாறையில் உள்ள ஒரு தோட்டத்தில் கூலி தொழிலாளி. இவரது மகள் லில்லி. இவரது கணவர் வினோத். தொழிலாளி.
இவர்களுக்கு திருமணமாகி 9 வருடங்களாகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வினோத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளகாதலாக மாறியதாக தெரிகிறது. இதனால் சில மாதங்களுக்கு முன்பு வினோத் மனைவியை தவிக்க விட்டு கள்ளகாதலியுடன் வசித்து வருகிறார். இதனை தெரிந்த கலையரசி 20 நாட்களுக்கு முன்பு மகள் வீட்டுக்கு வந்து அவருடன் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று கலையரசி, மகள் லில்லியை அழைத்து கொண்டு வினோத் தங்கி இருந்த அவரது கள்ளகாதலி வீட்டுக்கு சென்றார். அங்கு கலையரசி மற்றும் லில்லி, கள்ளகாதலியின் வீட்டின் முன்பு நின்று வினோத்தை அழைத்து அவரை கண்டித்து தட்டி கேட்டனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத் மற்றும் அவரது கள்ளகாதலி, மனைவியையும் மாமியாரையும் தகாத வார்த்தைகளால் திட்டி அங்கிருந்த மரகட்டையை எடுத்து சரமாறியாக தாக்கினர்.
இதில் கலையரசிக்கு, லில்லிக்கும் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவர்களின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் இதுகுறித்து கலையரசி போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வினோத் மற்றும் அவரது கள்ள காதலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.