திண்டுக்கல்: காந்தி கிராம பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று தமிழகம் வந்தார்.
அப்போது அவருக்கு பாஜக மற்றும் திமுக கட்சியினர் கொட்டும் மழையை கூட பொருட்படுத்தாமல் போட்டி போட்டு வரவேற்பு அளித்தனர். இதனால் சென்னையைவிட திண்டுக்கல்லில் மோடியை வரவேற்க மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமத்தில் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடிநேற்று தமிழகம் வந்தார்.
பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மதுரைக்கு வருகை தந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திண்டுக்கல் சென்றார். திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரையில் அமைக்கப்பட்டு இருந்த ஹெலிகாப்டர் இறங்குதளத்தில் பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டர் வந்து இறங்கியது. அங்கு பிரதமர் மோடிக்குக் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்பு அளித்தனர்.
அங்கிருந்து கார் மூலம் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். முதல்வர் மு.க ஸ்டாலினும் அதே வழியாக காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தார். பிரதமர் மற்றும் முதல்வரை வரவேற்பதற்காக நேற்று காலை முதலே காந்தி கிராம் பல்கலைகத்திற்கு எதிரே உள்ள சாலையில் பாஜக மற்றும் திமுகவினர், பொதுமக்கள் குவிந்து இருந்தனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி, மேள தாளங்களுடன் குவிந்து இருந்தனர். இரண்டு கட்சிகளும் தங்கள் பலத்தை காட்ட வேண்டும் அதிக அளவில் கட்சியினரை அழைத்து வந்திருந்தனர். இதனால், சாலையில் இருபுறமும் எங்கும் அதிக அளவில் கூட்டம் இருந்தது. பிரதமர் மோடி கடந்த மே மாதம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இருந்த கூட்டத்தை விட அதிக அளவில் கட்சியினர் திரண்டு இருந்தனர்.
மழை பெய்தபோதும் கூட்டம் கலையவில்லை. தலைவர்களை பார்ப்பதற்காக கட்சியினர் ஆர்வத்துடன் நின்றதை காண முடிந்தது. பாதுகாப்பு புடை சூழ காரில் வருகை தந்த பிரதமர் மோடி , வழியில் மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார். காரின் கதவை திறந்துவிட்டு நின்ற படி வந்த மோடி மக்களை பார்த்து உற்சாகமாக கை அசைத்தார்.
சில இடங்களில் மக்கள் கூட்டம் அதிகம் இருப்பதனை பார்த்ததால் காரை நிறுத்தி அங்கு நின்றிருந்த மக்களை பார்த்து சிரித்த முகத்துடன் உற்சாகமாக கை அசைத்தார். செண்டை மேளங்கள் முழங்க பிரதமர் மோடியை பாஜகவினர் வரவேற்றனர். பாரத் மாதா கி ஜெய் எனவும் பாஜகவினர் கோஷம் எழுப்பியதை காண முடிந்தது. பிரதமர் மோடியின் வருகையை யொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.