கோவை:
தமிழகத்தில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் இழப்பை தடுப்பதற்காக மோட்டார் வாகனங்களுக்கான அபராத தொகை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது. மோட்டார் வாகன சட்ட வழிகளை கடுமையாக்கும் வகையில் பல மடங்கு அபராத தொகை உயர்த்தப்பட்டது.
இருசக்கர வாகனம், கார், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மூலம் உண்டாகும் விபத்தை குறைப்பதற்காக கடந்த மாதம் 21-ந்தேதி முதல் புதிய அபராத தொகை அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் மோட்டார் விதிகளை மதிக்காமல் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கிய சாலைகளில் சிக்னல்களில் விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 30 வகையான விதிமீறல்கள் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
அதிக வேகம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும்படி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், ஒரு வழிப்பாதையில் வாகனம் ஓட்டுதல், மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து செல்லுதல், டிரைவிங் லைசென்சு இல்லாமல் ஓட்டுவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டினால் 1000 ரூபாய், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் 1000 ரூபாய், சிக்னலை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை, ஹெல்மெட் அணியாத, 1349 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் ஒரு வாரத்தில் மட்டும் 13 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய அபராத நடைமுறைகளின்படி, அனுமதிக் கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக பாரம் ஏற்றி வரும் சரக்கு வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், கூடுதலாக இருக்கும், ஒவ்வொரு டன்னுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது,
கோவை மாநகரில் மோட்டார் வாகன விபத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஓட்டினால் விபத்து குறையும். உயிர் இழப்பு தவிர்க்கப்படும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை தொடரும். அபராதத் தொகை குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாகவோ, அல்லது கோர்ட்டு மூலமாகவோ செலுத்தி குற்ற தண்டனை நடவடிக்கையில் இருந்து விடுவித்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினார்.