கார் வெடிப்பு சம்பவம் 5 பேரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை
கோவை கோட்டைமேட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்தது. இதில் ஜமேஷா முபின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக ஜமேஷா முபின் கூட்டாளிகள் முகமத் அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றார்கள். கார் வெடிப்பு சம்பவத்தில் பலியான ஜமேஷா முபின் அவரது கூட்டாளிகளுடன் நெருக்கமாக இருந்தவர்களை தீவிரமாக கண்காணித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் ஐ.எஸ் ஆதரவு எண்ணம் கொண்டவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக முழுவதும் கடந்த வாரம் ஒரே நேரத்தில் 43 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் செல்போன், மடிக்கணினி உள்ளிட்ட ஐ.எஸ் ஆதரவு தொடர்பான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபினுடன் போனில் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட ஐந்து பேரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்திற்கு வர வழைத்து விசாரணை நடத்தினார்கள். அவர்களுக்கும் கார் வெடிப்பு சம்பவத்துக்கும் தொடர்பு உண்டா ? என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. அதன் முடிவில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இதற்கு இடையே ஏற்கனவே கைதான 6 பேரின் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.