சென்னை: ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இருவருக்கும் இடையிலான சந்திப்பு விரைவில் நடக்கும் என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான ஏற்பாடுகளை முக்கியமான புள்ளி ஒருவர் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது.. நிரந்தர எதிரியும் கிடையாது என்பார்கள். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய கடிதம் அனுப்பிவிட்டு ஓ பன்னீர்செல்வம் தர்மயுத்தம் இருந்த போது அவர் டிடிவி தினகரனுக்கு, சசிகலாவிற்கும் நண்பனாக இருந்தார்.
அதே நாட்களில் எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரனுக்கு நண்பனாக இருந்தார். ஆனால் ஆட்சி வந்த பின் எடப்பாடி எதிராக மாறிவிட்டார். சில மாதங்களில் மீண்டும் ஓபிஎஸ் டிடிவிக்கு நண்பனாகிவிட்டார்.
இந்த நிலையில்தான் அதிமுகவில் இரு துருவங்களாக இருந்த ஓபிஎஸ் – டிடிவி இருவரும் சந்திப்பு நடத்த போவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிடிவி தினகரன் – ஓ பன்னீர்செல்வம் இருவருமே எடப்பாடி எதிர்ப்பு என்று ஒற்றை புள்ளியில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நாட்களில் இருந்தே ஓபிஎஸ் – டிடிவி ஆகியோர் நெருக்கமாகி வருகின்றனர். ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவிற்கு பின் இவர்கள் இருவரும் மேலும் நெருக்கமாகிவிட்டனர். எடப்பாடி அதிமுகவை தனி ஆளாக அபகரிக்க பார்ப்பதாக டிடிவி – ஓபிஎஸ் இருவரும் ஒரே குரலில் குற்றஞ்சாட்டி வருகிறார்கள்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பே அதிமுகவில் மீண்டும் சசிகலா – டிடிவி தினகரன் இணைய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர்கள். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவிற்காக பணிகளை செய்தவர்கள் யாராக இருந்தாலும் மீண்டும் அதிமுகவிற்குள் வர வேண்டும். நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். இதற்காக யாரையும் சந்தித்து பேச நான் தயார் என்று கூறியுள்ளார். இதை சசிகலாவும் ஏற்றுக்கொண்டு உள்ளார்.
நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். நாம் எல்லோரும் ஒன்றாக இணைய வேண்டும். அதிமுக வலிமையாக இருக்க வேண்டும் என்றால் நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், என்று சசிகலா கூறியுள்ளார். இன்னொரு பக்கம் டிடிவி தினகரனும் இதை வரவேற்றுள்ளார். தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே, என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டு உள்ளார்.
இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன் மீண்டும் பேட்டி அளித்த டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைய வேண்டும். பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமியை போல் காலையும் பிடிக்கமாட்டேன், கழுத்தையும் பிடிக்கமாட்டேன். நான் அப்படிப்பட்டவன் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் ஓபிஎஸ்-ஐ சந்திக்க தயாராக உள்ளேன். இபிஎஸ் ஜெயலலிதாவின் தொண்டன் இல்லை, என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது ஓ பன்னீர்செல்வத்தை சந்திக்க தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு ஓ பன்னீர்செல்வமும் ஓகே சொல்லி இருந்தார். அதாவது டிடிவி தினகரனை சந்திக்க தயார் என்று ஓ பன்னீர்செல்வமும் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் சந்திப்பும் விரைவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமாக இருக்கும் வைத்தியலிங்கம் சமீபத்தில் பட்டுக்கோட்டை அருகே சசிகலாவை சந்தித்தார். இவர்கள் நெருக்கமாகி பேசிக்கொண்டு இருக்கின்றனர். இவர் டிடிவி தினகரனுடனும் பேசிக்கொண்டு இருக்கிறாராம்.
இவர்தான் ஓபிஎஸ் – தினகரன் இருவருக்கும் இடையிலான சந்திப்பை ஏற்படுத்த போவது என்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வருகிறார். இந்த வாரம் பெரும்பாலும் சந்திப்பு நடக்கும் என்று கூறப்படுகிறது. தஞ்சையில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் இவர்கள் சந்திக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பில் ஒருங்கிணைந்த அதிமுக பற்றி இவர்கள் ஆலோசனை செய்வார்கள். அது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த சந்திப்பிற்கு பின்பாக இவர்கள் ஒன்றாக இணைந்து சசிகலாவை சந்திக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஓபிஎஸ் – சசிகலா – டிடிவி தினகரன் மூவரும் ஒன்றாக சந்திக்கும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள். நாளை அதிமுக பொதுக்குழு வழக்கு நடக்க உள்ளது. இந்த வழக்கில் யாருக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என்ற கேள்வி, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் டிடிவி – ஓ பன்னீர்செல்வம் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இவர்கள் மூவரும் இப்படி திடீரென இணையும் முடிவில் இறங்கியதற்கு டெல்லி பாஜகதான் காரணம் என்றும் கூறுகிறார்கள். சமீபத்தில் தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சிடி ரவி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் அதிமுகவில் மோதல் நிலவுகிறது. அவர்கள் கட்சியில் நிலவும் மோதல் கூட்டணியான எங்களையும் ஓரளவிற்கு பாதிக்கும் என்று கூறினார். டெல்லியும் அதிமுக மோதலை இப்படித்தான் பார்ப்பதாக கூறப்படுகிறது. அதாவது அதிமுக மோதலால் பாஜக கூட்டணிக்கே சிக்கல் வரும் என்று அக்கட்சி நினைக்கிறதாம்.
எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா எல்லா பிரிந்து கிடந்தால் அதிமுக வாக்குகள் பிரியும். இதனால் அவர்களின் கூட்டணியில் இருக்கும் நமக்கும் சிக்கல் ஏற்படும். 2024 லோக்சபா தேர்தலில் இது சிக்கலை ஏற்படுத்தும் என்று பாஜக நினைக்கிறதாம். இதன் காரணமாகவே எடப்பாடி ஒற்றை தலைமைக்கு திட்டம் போடுவதை பாஜக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஓபிஎஸ் – சசிகலா – டிடிவி மூவரும் இணைப்பதற்கான வேலைகளில் டெல்லி பாஜக இறங்கி உள்ளதாம்.