பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 2 பேரை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவின் மாநில தலைநகர் பெங்களூருவில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வெளியான தகவல் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாநிலத்தின் தலைநகராக உள்ள பெங்களூருவிலேயே வாக்காளர் பட்டியல் முறைகேடு என்ற குற்றச்சாட்டு நாடு முழுவதும் கவனம் பெறும் செய்தியாக மாறியது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சி இத்தகைய புகார்களை முன்வைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்களை நீக்கியதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்தது. வாக்காளர் பட்டியல் முறைகேட்டில் தனியார் அறக்கட்டளை ஒன்றிற்கு தொடர்பு இருப்பதாகவும் அறக்கட்டைளையில் பணியாற்றும் ஊழியர்கள் தேர்தல் அதிகாரிகள் போல ஏமாற்றி வாக்காளர்களின் முழு விவரங்களை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு புகார் தொடர்பாக பிபிஎம்பி (பெங்களூர் மாநகரப் பேரவை) -யின் சிறப்பு ஆணையர் எஸ்.ரங்கப்பா மற்றும் நகர்புற மாவட்ட துணை ஆணையரான கே ஸ்ரீனிவாஸ் ஆகிய 2 அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியிலான நடவடிக்கைக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதேபோல், சிவாஜிநகர், சிக்பேட்டை, மகாதேவபுரா ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் 100 சதவீதம் சரிபார்க்கும் பணியை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் ஒவ்வொரு நிலையிலும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை ஈடுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் ஆட்சேபங்கள் இருந்தால் அது குறித்து முறையிடுவதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 24 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்க பணிகளை கண்காணிக்க பெங்களூரு மாநகராட்சி பணியில் இல்லாத மூன்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் நியமனம் செய்துள்ளது. பெங்களூரு பிராந்திய ஆணையர் இந்த பணிகளை ஒருங்கிணைக்கவும் மேற்பார்வையிடவும் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வாக்காளர் பட்டியலில் முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி பரபரப்பு குற்றச்சட்டை முன்வைத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ரன் தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில், “வாக்காளர் பட்டியல் முறைகேடு, வாக்காளர்களின் தகவல் திருட்டு விவகாரத்தில் பசவராஜ் பொம்மைக்கு மட்டும் இல்லை. மத்திய அரசுக்கும் தொடர்பு இருக்கிறது. வாக்காளர் தகவல் திருட்டு விவகாரத்தில் பசவராஜ் பொம்மை முக்கிய நபராக இருக்கிறார். இது குறித்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும்” என்றார்.