டிசம்பர் 4 ஆம் தேதி டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 5 ஆம் தேதி பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கிறார்.
வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் என மொத்தம் 20 நாடுகள் பங்கேற்கும் ஜி20 மாநாடு இந்தோனேசியாவில் அண்மையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் ரிதி சுனக் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். 2023ஆம் ஆண்டு இந்தியாவில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் இடையே இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவது வழக்கம். டெல்லியில் ஜி20 மாநாடு முன்னேற்பாடுகள் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மாநில முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 4ம் தேதி டெல்லி செல்ல உள்ளார்.
மேலும் தனிப்பட்ட முறையில் பிரதமரை சந்தித்து, தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளையும் முன்வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரை திரும்பப்பெற திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.