கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் அல்போன்ஸ் (வயது 43). தொழிலாளி.
இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் பேரூர் கோவிலுக்கு சென்றார். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்து வீடு திரும்பினார். அப்போது அரசு அஸ்பத்திரி அருகே வந்தபோது அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றார். மதுகுடித்து விட்டு வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளை எடுத்தார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அந்த வாலிபர் தன்னை ராமநாதபுரம் பகுதியில் இறக்கி விடும் படி லிப்ட் கேட்டார். உடனே அல்போன்ஸ் தான் மதுபோதையில் இருப்பதாகவும், தானும் ராமநாதபுரம் தான் செல்ல உள்ளதாகவும் எனவே மோட்டார் சைக்கிளை நீங்கள் ஓட்டுங்கள் என அந்த வாலிபரிடம் கூறினார்.
அந்த வாலிபரும் மோட்டார் சைக்கிளை தான் ஓட்டுவதாக கூறி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது 2 பேரும் நண்பர்கள் ஆனார்கள். இதனால் 2 பேரும் சேர்ந்து மீண்டும் மதுகுடிக்க முடிவு செய்தனர். இதையடுத்து ஒலம்பஸ் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு 2 பேரும் சென்று மது குடித்தனர். பின்னர் அல்போன்ஸ் தான் வீட்டுக்கு செல்வதாக கூறி அந்த வாலிபரிடம் தனது மோட்டார் சைக்கிள் சாவியை கேட்டார். ஆனால் அந்த வாலிபர் தர மறுத்தார்.
இதனால் அல்போன்ஸ் வீட்டிற்கு நடந்து சென்று மோட்டார் சைக்கிளின் மற்றொரு சாவியை எடுத்து வந்தார். அப்போது டாஸ்மாக் கடை முன்பு நின்றிருந்த தனது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த வாலிபரை தேடி பார்த்தபோது அவரும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அல்போன்ஸ் இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்போன்ஸ் தனது மோட்டார் சைக்கிளை ஓட்ட கொடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.