உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றிருக்கிறது.
பொருளாதார மந்தநிலை, உணவு, எரிபொருள்களின் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம், மீண்டெழ முடியாத கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் என உறுப்பினராக இருக்கும் நாடுகள் முதல் உலகநாடுகள் வரை பெரும் சவாலை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்தியா தலைமைத்துவத்தை ஏற்றிருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஜி20 அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூடியது.
இந்தக் கூட்டத்தில், பா.ஜ.க தலைவர் ஜே.பி நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, சிபிஐ(எம்) தலைவர் சீதாராம் யெச்சூரி, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய அமைச்சரும் எல்.ஜே.பி தலைவருமான பசுபதிநாத் பராஸ், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஐ.யு.எம்.எல் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு இந்தியாவின் ஜி20 தலைவர் பதவி குறித்த தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, “இந்தியா ஒரு பெரிய உச்சி மாநாட்டை நடத்துவது இது முதல் முறை அல்ல. 1983-ல் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட NAM உச்சி மாநாட்டையும், 1983 நவம்பரில் 42 நாடுகள் கலந்து கொண்ட CHOGM உச்சி மாநாட்டையும் இந்தியா நடத்தியிருக்கிறது. முக்கியமாக, ஜி20 அமைப்பில் சீனா உறுப்பினராக இருப்பதால், பிரதமர் மோடி தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இந்திய எல்லைக்குள் சீனாவின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
இந்தியாவில் ஊழல் செய்துவிட்டு தப்பியோடியவர்களை வெளியில் பாதுகாப்பான புகலிடங்களைக் கண்டுபிடிக்க அனுமதிக்காத சட்டத்தை இயற்ற, தனது அந்தஸ்தைப் பயன்படுத்த வேண்டும்.
சமீபத்தில் ஒப்புக் கொள்ளப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பாக இந்தியா மற்றும் வளரும் நாடுகளுக்கு இழப்பீடு கோருவதற்கான நிலையைப் பயன்படுத்துதல், அமெரிக்காவுடன் பேசுவதன் மூலம் இந்தியர்களுக்கான அமெரிக்க விசாக்களுக்கான 900 நாட்கள் நீண்ட காத்திருப்புக்கு முடிவுகட்டுதல், மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு சில நாடுகளின் நிதி உதவியை நிறுத்துதல் ஆகியவற்றில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும். பிரதமருக்கு எனது வாழ்த்துகள்” எனத் தெரிவித்திருக்கிறார்.
சி.பி.எம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜி20 தலைமை பதவிக்காக இந்தியா சார்பில் அறிவிக்கப்பட்ட லட்சியமான, ‘ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரே எதிர்காலம்’ குறித்து பேசினார். “சமத்துவம் மற்றும் கண்ணியத்தின் அடிப்படையில் அனைத்து வேறுபாடுகளையும் களைவதன் மூலம் சமூக பன்மைத்தன்மை கொண்டாடப்படும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஜி-20 அமைப்பின் இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி,ஜி 20 வெற்றியடையச் செய்ய அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. ஜி-20 தலைவர் பதவி முழு நாட்டிற்கும் சொந்தமானது, மேலும் இது இந்தியாவை உலகிற்குக் காண்பிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. ஜி-20 தலைவர் பதவியானது சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்கு பெரும் வாய்ப்புகளை கொண்டு வருவதால், இந்தியா மீது உலகளாவிய ஆர்வமும் ஈர்ப்பும் உள்ளது. இந்த வாய்ப்பை நாட்டின் நலனுக்காக பயன்படுத்துமாறு வலியுறுத்தியது இந்தக் கூட்டத்தின் மூலம் அறியப்படுகிறது. நிச்சயம் ஜி20 தலைவர் பதவி வழக்கமான பெரிய பெருநகரங்களுக்கு அப்பால் இந்தியாவின் சில பகுதிகளையும் வெளிப்படுத்த உதவும்” எனப் பேசினார்.