கோவை ஒண்டிப்புதூர் அடுத்த காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 59 ).இவர் தனியார் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு நாகராஜ் தனது நாயை அழைத்துக் கொண்டு நடந்து சென்றார் .அப்போது அங்கு குடிபோதையில் நின்று கொண்டிருந்த சில வாலிபர்களை பார்த்து நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர்கள் கற்களை வீசி நாயை தாக்கினர். இதை பார்த்த நாகராஜ் அந்த வாலிபர்களை தட்டி கேட்டார். அப்போது அந்த வாலிபர்கள் நாகராஜிடமும் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கினர். மேலும் கீழே கிடந்த கல்லை எடுத்து நாகராஜின் மண்டையை உடைத்தனர். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. அவர் வலியால் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களைப் பார்த்து அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயமடைந்த நாகராஜனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து நாகராஜ் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜனை தாக்கியது ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (21), சக்தி (33), ஹஸீன் (23)என்பது தெரிய வந்தது . இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.