விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய கோரியும் அதன் தலைவர்கள் திருமாவளவன் மற்றும் வன்னியரசு ஆகியோரை கைது செய்ய கோரியும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி- தமிழகம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இக்கட்சியின் கோவை மாவட்ட தலைவர் வி.வி.மாணிக்கம் தலைமையில் மனு அளிக்க வந்த அக்கட்சியினர் சுமார் 30க்கும் மேற்பட்டோர் விடுதலை சிறுத்தைகளை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகத்தில் சமீப காலங்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் அராஜகப் போக்கு எல்லை மீறிப் போவதாகவும் அவர்கள் தொடர்ந்து தேச விரோத பிரிவினை சக்திகளோடு கைகோர்த்து தனி தமிழ்நாடு கோரிக்கை பேசுவது தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இருந்து கொண்டு இந்து சமய நம்பிக்கைக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். மேலும் சில மாதங்களுக்கு முன்பாக தமிழக ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது கற்களையும் கம்பிகளையும் வீசி தாக்க முயன்றதாக குற்றம் சாட்டிய அவர்கள் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்திற்கு தொலைபேசிகள் மூலமாக தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக கூறினர்.எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை தடை செய்ய வேண்டும் எனவும் மேலும் அதன் தலைவர்களான திருமாவளவன் மற்றும் வன்னியரசு ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு குண்டு சட்டத்தில் கைது செய்திட வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.