தேனி அருகே சிறுத்தையின் உடல் பாகங்களை தனது மனைவியின் உதவியுடன் சுடுகாட்டில் வைத்து எரித்தவர் கைது. தலைமறைவான மனைவியை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
தேனி அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். கடந்த மாதம் 17ஆம் தேதி இவரது வீட்டில் சிறுத்தையின் தோல் மொட்டை மாடியில் காய வைக்கபட்டு இருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் துரைப்பாண்டியன் வீட்டுக்கு சென்று பார்த்த போது துரைப்பாண்டியன் வீட்டை பூட்டி தலைமறைவாகி விட்டார்.
பின்னர் வீட்டின் மேல் மாடிக்கு சென்று பார்த்த போது அங்கே சிறுத்தையின் தோல்
மஞ்சள் பூசி மொட்டை மாடியில் காய வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மருத்துவர்கள் தகவல் அளித்தனர்.
முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் சிறுத்தையின் தோலை ஒரு வாரத்திற்கு
மேலாக மொட்டை மாடியில் காய வைத்து இருப்பது கண்டறியப்பட்டது. இந்த சிறுத்தை எங்கே எப்போது யாரால் வேட்டையாடப்பட்டது, எதற்காக சிறுத்தையை வேட்டையாடி மொட்டை மாடியில் காய வைத்து இருக்கிறார்கள் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த துரைபாண்டியனை வனத்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் துரை பாண்டியனுக்கு உதவியாக இருந்த அவரது மனைவி செல்லம்மாள் தலைமறைவாக உள்ளர்.
துரைபாண்டியனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மலையடிவாரத்தில் இறந்து கிடந்த சிறுத்தையின் தோலை உரித்து விட்டு அதன் உடல் பாகங்களை தேனி அருகில் உள்ள சுடுகாட்டில் வைத்து எரித்ததாக வனத்துறை நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
இதையடுத்து துரைபாண்டியனை வனத்துறையினர் தேனி லட்சுமிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும் இதே போல் பல வன விலங்குகளை வேட்டையாடி இருப்பாரா என்பது குறித்தும், இவருக்கு மேலும் பலர் உடந்தையாக இருந்துள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்த அவரை வனத்துறையினர் தங்களின் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.