உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமாக இருக்கும் கூகுள்-ன் அடுத்தகட்ட வளர்ச்சி இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டது தான்.
இந்த நிலையில் சுந்தர் பிச்சை தலைமையிலான கூகுள் ஏற்கனவே இந்தியாவில் பல பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தாலும் அதில் அடுத்தகட்டமாக இந்தியாவில் தனது முக்கியமான கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருளான கூகுள் பிக்சல் போன் இந்தியாவில் தயாரிக்கத் திட்டமிட்டு உள்ளார் சுந்தர் பிச்சை.
இந்த நிலையில் மத்திய அரசின் PLI மற்றும் மேக் இன் இந்தியா திட்டங்களின் கீழ் கூகுள் பிக்சல் போன்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காகச் சுந்தர் பிச்சை நேரடியாக இந்தியா வர உள்ளார்.
இந்தியாவில் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் முதல் சாம்சங், ஆப்பிள் ஆகியவை இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்த ஐபோன், ஐபேட்,மேக் லேப்டாப் உற்பத்தியை குறைந்த காலகட்டத்தில் அதிகளவில் இந்தியா, வியட்நாம் மற்றும் இதர தென்கிழக்கு நாடுகளுக்குத் திருப்பியுள்ளது.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடர்ந்து கூகுள் தனது பிக்சல் போன்களை இந்தியாவில் அசம்பிள் செய்யும் திட்டம் குறித்து மத்திய அரசுடன் ஆலோசனை செய்யச் சுந்தர் பிச்சை இந்தியா வர உள்ளது. இந்தப் பயணத்தில் நேரடியாக அரசு அதிகாரிகளை அடுத்த வாரம் சந்தித்துப் பேச உள்ளார்.
இந்தச் சின்ன விஷயத்திற்குச் சுந்தர் பிச்சை நேரடியாக இந்தியா வருகிறாரா என்று உங்களுக்குச் சந்தேகம் வர அதிக வாய்ப்பு உள்ளது. கூகுள் சேவைகள் கடந்த சில வாரங்களாக மத்திய அரசு நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசின் கட்டுப்பாட்டு அமைப்பான இந்தியப் போட்டி ஆணையம் (சிசிஐ) அக்டோபர் மாதம் ஓரே வாரத்தில் 2வது முறையாகக் கூகுள் சேவைகள் மீது அபராதம் விதித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது சுந்தர் பிச்சை நேரடியாக இந்தியா வருவதால் இதுகுறித்த விவாதம் மற்றும் ஆலோசனை கட்டாயம் மத்திய அரசு அதிகாரிகளுடன் கட்டாயம் இருக்கும்.
ஆனால் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், கூகுள் தாய் நிறுவனமான ஆல்பபெட் தலைவரான சுந்தர் பிச்சை உடனான சந்திப்பில் இந்தியாவில் கூகுள் போன்களைத் தயாரிப்பது, ஆப் டெவலப்பர் எகோசிஸ்டம் உருவாக்குவது, சைபர் செக்யூரிட்டி, மொபைல் சேவைகளில் இந்திய மொழிகளின் பயன்பாடு போன்றவற்றை நாங்கள் விவாதிப்போம் என்று தெரிவித்தார்.
கூகுள் நிறுவனத்தின் ப்ளே ஸ்டோர் கொள்கைகள் தொடர்பாக அதன் ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி 936.44 கோடி ரூபாய் அபராதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ).
இதற்கு முன்பு அதே வாரத்தில் அக்டோபர் 20 ஆம் தேதி கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அதன் ஆதிக்க நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 1,337.76 கோடி ரூபாய் அபராதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ).