மேற்கு பர்த்வான்: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா நடத்திய நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.
மேற்கு பர்த்வான் மாவட்டத்தில் பாரதிய ஜனதா சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி பங்கேற்றார்.
அசில்சுவை முன்னாள் மேயர் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில், ஏழை எளிய மக்களுக்கு போர்வைகள் வழங்கும் விழா நடைபெற்றது. இலவசமாக போர்வைகள் வாங்க நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்த நிலையில், அதில் ஒரு சிலர் முண்டியடித்து கொண்டு மேடையை நெருங்க முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இதில் 3 பெண்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இந்த கூட்டத்திற்கு பாஜக முறையான அனுமதி பெறவில்லை என்றும் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி அனுமதி இல்லாமல் பேரணி நடத்தியதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.