கோவை காந்திபுரத்தில் நகர பஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கு எப்போதுமே பரபரப்பாக காணப்படும். மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருக்கும். இப்படி மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இளைஞர்களை குறி வைத்து பெண் புரோக்கர்கள் சிலர் பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த செயல்களில் ஈடுபடும், பெண் புரோக்கர்கள் தோளில் பேக் ஒன்றை மாட்டிக் கொண்டு சுற்றி திரிகின்றனர். இவர்கள் அந்த வழியாக வரும் 20 முதல் 25 வயதுடைய இளைஞர்களை பார்த்து வழிமறிக்கின்றனர். அவர்களிடம் அழகான பெண்கள் உள்ளனர் என்று ஆசை வார்த்தையை உதிர்க்கின்றனர். அழகான பெண் என்றவுடன் இளசுகளுக்கு சபலம் ஏற்பட்டு மூதாட்டி கூறுவதை மேலும் கேட்க தொடங்கி விடுகின்றனர். உடனே பெண் புரோக்கரும், இளைஞர்களை உசுப்பேற்றும் வகையில் மூதாட்டியின் செல்போனில் போன் செய்து, இளைஞர்களிடம் கொடுக்கிறார். அப்போது மறுமுனையில் பெண் ஒருவர் பேசுகிறார். இதனால் உண்மை தான் என நம்பி இளைஞர்களும் அவர்களுடன் பேசி கொண்டே இருக்கின்றனர். அப்போது எதிர் முனையில் பேசும் பெண், நீங்கள் எந்த கலர் சட்டை அணிந்து இருக்கிறீர்கள். எங்கு நிற்கிறீர்கள் என விசாரிக்கின்றனர். நீங்கள் நிற்கும் இடத்திலேயே நில்லுங்கள் நான் ஒரு அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் என கூறுகிறார். இளம்பெண் கூறியதை கேட்டதும் வாலிபரும் தன்னை மறந்து அப்படியே இளம்பெண்ணை பார்ப்பதற்காக அவரின் வருகைக்காக காத்திருக்கிறார்கள். அப்போது அந்த பெண் புரோக்கர் இளைஞரிடம் எனக்கு உண்டாண பணத்தை கொடுத்து விடு. நான் புறப்படுகிறேன். அந்த பெண் வந்ததும் நீ சந்தித்து கொள் என கூறி நச்சரிக்கிறார். இளைஞர்களும், அதனை நம்பி ரூ.200 முதல் ரூ.500 வரை பணத்தை கொடுத்து விடுகின்றனர்.
ஆனால் இளைஞர் பல மணி நேரம் காத்திருந்தும் யாரும் வரவில்லை. பெண் வருவாள். அவளை சந்திக்கலாம் என ஆசையோடு காத்து நின்ற இளைஞர்கள் தாங்கள் ஏமாந்ததை யாரிடமும் சொல்லாமல், அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகின்றனர். இதுபோன்ற சம்பவத்தால் ஒரு நாளைக்கு சராசரியாக 100 முதல் 200 இளைஞர்கள் வரை பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது:-
இளைஞர்கள் இது போன்ற பெண் புரோக்கர்களை உடனே காவல்துறையில் பிடித்து ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் சபலம் அதை தடுத்து விடுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தும் பெண் புரோக்கர்கள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை சம்பாதித்து விடுகின்றனர். ஒவ்வொரு பெண் புரோக்கருக்கும் 2, 3 பேர் செல்போனில் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ஒரு பெண் புரோக்கர் அழைத்தால், மற்ற புரோக்கர்கள் தயார் நிலையில் இருந்து போனில் பேசுகின்றனர். இது அவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம். ஆனால் இது தெரியாத வாலிபர்கள் பணத்தை இழந்து ஏமாறுகிறார்கள்.
இத்தகைய பெண் புரோக்கர்களை போலீசார் அடையாளம் கண்டும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே இளைஞர்களின் நலன் பாதுகாக்கப்படும். அவர்கள் ஏமாறும் நிலை தவிர்க்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.