சென்னை பள்ளிக்கரணையில் பாலத்தின் தடுப்பு சுவரில் சொகுசு கார் மோதி கவிழ்ந்தது. இதில் பெண் என்ஜினீயர் பலியானார். மேலும் 3பேர் படுகாயம் அடைந்தனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா அருணா (வயது 24). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர், சென்னையை அடுத்த துரைப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்காக அதே பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி இருந்தார். நேற்று காலை கிருத்திகா அருணா, தன்னுடன் பணியாற்றும் கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், அபிஷா (23), பங்கஜ் (19) ஆகியோருடன் சொகுசு காரில் சென்னையை சுற்றிப் பார்க்க புறப்பட்டு சென்றார்.
கார் ஸ்ரீதர் ஓட்டினார். அவருக்கு அருகில் பங்கஜும் பின் இருக்கையில் கீர்த்திகா, அருணா, அபிஷா ஆகியோரும் அமர்ந்து பயணம் செய்தனர்.
துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். பள்ளிக்கரணை குப்பை கிடங்கு அருகே வேகமாக வந்த சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து. சாலையோரம் உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. தடுப்புச் சுவரில் மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
தடுப்புச் சுவரில் மோதிய போது காரின் கதவுகள் தானாக திறந்து கொண்டது. இதில் பின்னால் அமர்ந்து இருந்த கீர்த்திகா, அருணா காரில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். மற்று மூன்று பேரும் இடிபாட்டில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சாலையில் கவிந்த காரை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு பள்ளிக்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா அருணா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற மூன்று பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.