தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் விலையுயர்ந்த கைக்கடிகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதற்கு கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ” நான் கையில் கட்டியுள்ள வாட்ச் ரூ. 3.5 லட்சம் மதிப்பிலான ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களால் செய்யப்பட்டது. மொத்தம் 500 வாட்ச்கள் உள்ளது. நான் அணிந்திருப்பது 149 வது வாட்ச். என் உயிர் இருக்கும் வரை இந்த வாட்ச் இருக்கும். ” என்று கூறினார்.
இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “பிரான்ஸ் நிறுவத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள Rafale watchஐ, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.
வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா?கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அண்ணாமலை கூறியிருப்பதாவது, திமுகவினர் என்னுடன் ஊழல் குறித்து விவாதிக்க விரும்புவதால், நான் அதை எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன். நான் தமிழக பா.ஜனதா தலைவராக பொறுப்பேற்றதுக்கு முன்பு, மே மாதம் 2021ல் வாங்கிய எனது ரஃபேல் கடிகாரத்தின் விவரங்கள், அதன் ரசீது மற்றும் எனது வாழ்நாள் வருமான வரி அறிக்கைகள் 10 ஆண்டுகால எனது வங்கிக் கணக்குகளின் பரிவர்த்தனைகள் (எனது ஒவ்வொரு வருமானமும் காட்டப்படும்), ஆகஸ்ட் 2011 முதல் ஐபிஎஸ் அதிகாரியாக நான் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும் வரை ஈட்டிய வருமானம் , எனக்குச் சொந்தமான அசையும் அசையா சொத்துகளின் விவரங்கள், என்னிடம் உள்ள ஆடு மற்றும் மாடுகளின் எண்ணிக்கை என அனைத்தையுமே விரைவில் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களை போற்றும் நம் தமிழக மக்களைச் சந்திப்பதற்காக மாநிலம் முழுவதும் நான் மேற்கொள்ளவிருக்கும் பாதயாத்திரையின் முதல் நாளில் வெளியிடுவேன். அன்றைய தினம் நான் பத்திரிக்கையாளர்களை சந்தித்து மேல் குறிப்பிட்ட அனைத்து விபரங்களையும் பொதுவெளியில் வெளியிட உள்ளேன்.
நான் அறிவித்ததை விட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார். இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.