கோவையில் டி.வி. திருடிய போலீஸ்காரர் கைது

Dகோவையில் டி.வி. திருடிய போலீஸ்காரர் கைது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் தாசிம் (வயது27). இவர் அதே ஊரை சேர்ந்த சாருக்கு என்பவருடன் கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள வரதராஜபுரத்தில் தங்கி டி.வி மற்றும் கியாஸ் அடுப்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 20-ந் தேதி தாசிம், சாருக்கு ஆகியோர் கண்ணம்பாளையம் பகுதிக்கு டி.வி.க்களை விற்பனைக்கு எடுத்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த சூலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வரும் முருகன் (34), மற்றும் அவருடன் இருந்த பள்ளபாளையத்தை சேர்ந்த பிரதீஸ் (27) ஆகியோர் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் தாசிம், சாருக்கு ஆகியோரிடம் இது திருட்டு டிவி தானே உங்கள் மீது எனக்கு சந்தேகம் உள்ளது விசாரிக்க வேண்டும் என அந்தப் பகுதியில் உள்ள ஒர்க் ஷாப்புக்குள் அழைத்துச் சென்றார்.

அங்கு வைத்து 2 பேரையும் கட்டி வைத்து தாக்கினர். மேலும் நீங்கள் எங்கே தங்கி இருக்கிறீர்கள் என முகவரியை கேட்டு தாசிமுடன் போலீஸ்காரர் முருகன், பிரதீஷ் ஆகியோர் ஒரு காரில் வரதராஜபுரம் வந்தனர். பின்னர் அவர்கள் தங்கி இருந்த வீட்டிற்கு சென்று அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த 5 டி.வி.க்கள், கியாஸ் அடுப்பு ரூ.47 ஆயிரம் பணம் ஆகியவற்றை போலீஸ்காரர் பறித்து தப்பி சென்றார். இது இதுகுறித்து தாசிம் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் முருகன், பிரதீஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு வழங்க வேண்டிய போலீஸ்காரர் ஒருவரே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.