தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு தமிழக அரசு சார்பில் வேஷ்டி , சேலை ,பொங்கல் சிறப்பு தொகுப்பு, கரும்பு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்ணுகளுக்கு தாய் வீட்டு சீதனம் வழங்கப்படுவதுண்டு. தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை 2009ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை வழங்கப்பட்டது. இத்திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளில் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டது. 2021ல் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2500 கொடுக்கப்பட்டது. கடந்த ஆண்டில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
இதில் பல பொருட்கள் குறைவான தரத்தில் வழங்கப்பட்டதாக தொடர் புகார்கள் விமர்சனங்கள் எழுந்தன. கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் நடப்பாண்டில் சரிசெய்யப்பட வேண்டிய நோக்கில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில் இதுவரை தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை . தற்போது பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இந்த பரிசுத்தொகுப்பும் ரூ.1000 வழங்கப்படும். அதன்படி ஜனவரி 2ம் தேதி முதல் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும். இதன் மூலம் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.