கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் சதீஸ்குமார் (வயது 36). இவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் பீளமேடு பகுதியில் தனியார் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறேன் . சில நாட்களுக்கு முன்பு எனது முகநூலில் இடம், வீடு விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் பார்த்தேன். இதுகுறித்து நான் விசாரித்த போது மீனா எஸ்டெட்டை சேர்ந்த ஜெகநாத் சிங் மற்றும் அவரது மனைவி கலைவானி மற்றும் இளவரசி, ரித்திகா, அஸ்வினி, அஜய் ஆகியோர் அறிமுகமானார்கள்.
அவர்கள் ஒரு இடத்தை காட்டி அந்த இடத்தில் வீடு கட்டி தருவதாக கூறினர். அதற்காக முன் பணமாக ரூ.20 லட்சத்தை செலுத்துமாறு தெரிவித்தனர். இதனை உண்மை என நினைத்து நான் ரூ.20 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் வெகு நாட்கள் ஆகியும் அவர்கள் நிலத்தையே, வீட்டையே தராமல் இருந்து வந்தனர். இதுகுறித்து கேட்கும்போது முன்னுக்கு பின் முரனாக பதில் கூறிவந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த நான் எனக்கு தருவதாக கூறிய இடத்திற்கு சென்று விசாரித்தேன்.
அப்போது அந்த இடத்தின் உரிமையாளர் அந்த இடத்தை விற்பனை செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் கணவன்-மனைவி இருவரும் சிறையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் போலீசில் புகார் அளித்தேன். எனவே என்னிடம் ரூ.20 லட்சம் வாங்கி மோசடி செய்த கணவன்-மனைவி, 3 பெண்கள் மற்றும் ஒரு வாலிபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.