கோவை வடவள்ளியை அடுத்த காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண்.
சம்பவத்தன்று இவர் வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் குளியலறையின் அருகில் இருந்து ஓடுவதை பார்த்தனர். உடனே பொதுமக்கள் அந்த வாலிபரை துரத்தி மடக்கி பிடித்தனர். அவர்கள் அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுகுறித்து பேரூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் காளம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரகுமார் (29) என்பதும், பிளம்பராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
மேலும் ராஜேந்திரகுமார் குடிபோதையில் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் ராஜேந்திரகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை சுண்டகாமுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.