பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 5 கிலோ அரிசியை ஒரு கிலோ ரூ.3 என்ற விலையில் மாநில அரசுக்கு வழங்கிவருகிறது.
அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம்தோறும் 35 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. மாநில அரசுகள் தங்களது தேவைகளை உணர்ந்து, மத்திய தொகுப்பிலிருந்து உணவு தானியங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் தேசம் முழுவதும் 80 கோடி மக்கள் பயனடைகிறார்கள். தமிழகத்தில் 3.6 கோடி மக்கள் இந்தச் சட்டத்தின் மூலமாகப் பயனடைந்துள்ளனர்.
2022-23 நிதியாண்டில் உணவு பாதுகாப்புக்கு மத்திய பா.ஜ.க அரசு 2,06,831 கோடி ரூபாயை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கியிருந்தது. நவம்பர் மாதம் இறுதி வரை உணவு பாதுகாப்புக்காக 1,50,883 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. மேலும் 2019 முதல் 2022 நிதி ஆண்டுகளில் 9,96,677 கோடி ரூபாயை மத்திய அரசு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
2021-22-ம் ஆண்டு மானிய விலையில் 29,46,119 டன் உணவு தானியங்களை மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்துக்கு வழங்கியது. மேலும், 2022-23-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை தமிழகத்துக்கு 18,32,153 டன் உணவு தானியங்களை மத்திய பாஜக அரசு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் தொடர்ச்சியாக தற்போது மத்திய பாஜக அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 2023-ம் ஆண்டு, ஜனவரி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை 2,00,000 கோடி ரூபாய் செலவில் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 5 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும் என்றும், அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு 35 கிலோ விலையில்லா அரிசி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் மானியத்தை அரசு ஏற்றுக்கொண்டு 2011-ம் ஆண்டு முதல் 5 கிலோ அரிசியை தமிழக அரசு இலவசமாக வழங்கிவருகிறது.
மத்திய பா.ஜ.க அரசின் அறிவிப்பால் 2023-ம் ஆண்டில் தமிழக அரசு 1,000 கோடி ரூபாய் வரை சேமிக்கவிருக்கிறது. ஆதலால், இனியும் காலம் தாழ்த்தாமல், 2023-ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், டீசலுக்கு 4 ரூபாயும், வீட்டு உபயோக எல்.பி.ஜி சிலிண்டர் ஒவ்வொன்றுக்கும் 100 ரூபாய் மானியத்தையும் திமுக அரசு வழங்கி, தாங்கள் வழங்கிய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.