கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42). காவலாளி.இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆறுச்சாமி தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது சகோதரர் மகாலிங்கம் (50). இந்த நிலையில் நேற்று இரவு மகாலிங்கம் மற்றும் ஆறுச்சாமி ஆகியோர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது அண்ணன் தம்பி இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஆக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். அப்போது ஆறுச்சாமி அங்கிருந்த டியூப்லைட் மற்றும் மரக்கட்டையை எடுத்து மகாலிங்கத்தை சரமாரியாக தாக்கினார். இதில் ஆத்திரம் அடைந்த மகாலிங்கம் அங்கிருந்து கத்தியை எடுத்து தம்பி ஆறுச்சாமியின் வயிற்றில் குத்தினார். பலத்த காயமடைந்த ஆறுச்சாமியின் வயிற்றில் இருந்து ரத்த கொட்டியது. இதனால் பயந்து போன மகாலிங்கம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனைப் பார்த்து ஆறுச்சாமி அங்கிருந்த ஒரு துண்டை எடுத்து வயிற்றில் கட்டி க்கொண்டு மகாலிங்கத்தை துரத்தினார். வடப்புதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அதிக ரத்தம் போக்கு ஏற்பட்டு சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆறுச்சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மகாலிங்கத்தை தேடி வருகின்றனர்.