சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பட்சத்தில் அது அதிமுக உட்கட்சி பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வாய்ப்புகள் உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏவின் மறைவை தொடர்ந்து தமிழ்நாட்டில் அந்த ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.
உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. இன்று காலை இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் வரும் வாய்ப்புகள் உள்ளன. இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பட்சத்தில் அது அதிமுக உட்கட்சி பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் அதிமுகவில் தற்போது உட்கட்சி மோதல் நிலவி வருகிறது. இதில் இப்போதைக்கு தீர்வு கிடைக்கும் அறிகுறிகள் தெரியவில்லை. இன்று உச்ச நீதிமன்றத்தில் பொதுக்குழு விசாரணை நடக்க உள்ளது. ஒருவேளை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்பாக வழக்கில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் அதிமுகவின் சின்னம் முடங்கும் வாய்ப்புகள் கூட உள்ளன. இடைத்தேர்தலை எதிர்கொள்வதில் சின்னம் ரீதியாக அதிமுகவிற்கு சிக்கல் உருவாகும் நிலை.ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்புதான் தேர்தல் ஆணையத்தில் உள்ளது.
என்ன தேர்தல் வந்தாலும் அதிமுக சார்பாக போட்டியிட வேண்டும் என்றால் இரண்டு பேருமே கையெழுத்து போட வேண்டும். எடப்பாடி – ஓ பன்னீர்செல்வம் கையெழுத்து போட வேண்டும். இதற்கு ஓ பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் எடப்பாடியோ தான்தான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறி வருகிறார். தான்தான் ஒற்றை தலைமை என்று கூறி வருகிறார். இடைத்தேர்தல் வந்தால் வேட்பாளர் மனுவில் எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் கையெழுத்து போடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி கையெழுத்து போட்டால், அவரே தான் இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை என்று ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும்.
இதனால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் குறிப்பாக புலம் பெயர்ந்தோருக்கு அந்தந்தப் பகுதிகளில் வாக்களிக்க வசதி செய்யும் ரிமோட் வாக்குப்பதிவு முறை குறித்து விளக்கம் கேட்க அதிமுகவிற்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியது. ஜனவரி 16ம் தேதி நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அதிமுகவிற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை எடப்பாடி தரப்பினர் திருப்பி அனுப்பி உள்ளனர். இதற்கு தற்போது தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பதில் அளித்துள்ளார். அதில், தேர்தல் ஆணையத்திடம் இந்த தகவல்தான் உள்ளது. இந்திய தேர்தல் ஆணைய ஆவணத்தில் அப்படித்தான் இருக்கிறது. அதில், அதிமுகவில் இன்றைய தேதி வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள்தான் உள்ளது, என்று குறிப்பிட்டுள்ளார்.
அப்படி இருக்க உட்கட்சி பிரச்சனை முடிவதற்கு முன் இடைத்தேர்தல் வந்தால் அது பெரிய பிரச்சனை ஆகும். உட்கட்சி பிரச்சனை முடிவதற்கு முன் இடைத்தேர்தல் வந்தால் 4 விதமான முடிவுகள் வர வாய்ப்புகள் உள்ளன. 1. திமுகவை வீழ்த்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி இறங்கி செல்லலாம். ஒருவேளை இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் எடப்பாடி கையெழுத்து போட்டால், அவரே தான் இடைக்கால பொதுச்செயலாளர் இல்லை என்று ஒப்புக்கொண்டது போல ஆகிவிடும். 2. எடப்பாடி இறங்கி செல்லாமல், நான்தான் இடைக்கால பொதுச்செயலாளர் என்று சொல்லலாம்.
அப்படி சொன்னால், சின்னம் முடங்கும் வாய்ப்புகள் உள்ளன. 3. இரண்டு தரப்பும் கையெழுத்து போடாமல் நகர்ப்புற உள்ளாட்சி இடைத்தேர்தலில் சில அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட முடியாமல் போனது போல, இந்த தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாமல் போகலாம். 4. பிரச்னையை தவிர்க்க கூட்டணி கட்சிக்கு இடத்தை கொடுக்க வாய்ப்புகளும் உள்ளன. அப்படி செய்தாலும் அதிமுக சின்னத்தில் அந்த கூட்டணி வேட்பாளர் போட்டியிட முடியாது. கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஈரோடு கிழக்கு தொகுதி என்பது 2008 தொகுதி மறுவரையறையின் போதுதான் இந்த தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தல்களை இந்த தொகுதி சந்தித்து உள்ளது. 2011 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக இங்கே போட்டியிட்டது. அதன் மூலம் தேமுதிக வேட்பாளர் சந்திரகுமார் இங்கே வென்றார். அதன்பின் 2011 சட்டசபை தேர்தலில் இங்கே அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு வென்றார். அதிமுக ஆதரவு தொகுதி என்று பார்க்கப்பட்ட இந்த கோட்டையில் 2021ல் காங்கிரஸ் வேட்பாளர் ஈவெரா திருமகன் திமுக கூட்டணியில் நின்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.