சென்னை: போராட்டத்தில் ஈடுபடும் தற்காலிக செவிலியர் பிரதிநிதிகளுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறையின் ‘சிற்பி’ திட்டத்தின் கீழ், 5000 மாணவ மாணவிகளுக்கான யோகா பயிற்சி வகுப்பு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; 2300 ஒப்பந்த செவிலியர்களை பணியில் அமர்ந்த அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செவிலியர்களை மீண்டும் பணியில் சேர்க்க மாவட்ட வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த செவிலியர்களின் தனிப்பட்ட கோப்புகளை சரிபார்த்த பின் இன்று மதியம் 3 மணி அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. செவிலியர்கள் விவகாரத்தில் சுமுக சூழலை ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. சிலர் தூண்டுதலால் செவிலியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பெருநகரங்களில் மட்டுமே பணியாற்றிய செவிலியர்களுக்கு சொந்த ஊர்களில் பணியாற்ற வாய்ப்பு உள்ளது. ரூ.14 ஆயிரம் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில் தற்போது ரூ.18 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
திமுக அரசு செவிலியர்களை பாதுகாக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள இட ஒதுக்கீடு அடிப்படையிலேயே பணி நிரந்தரம் செய்ய முடியும். செவிலியர்களை அரசு பாதுகாக்கும், பணி பாதிப்பு ஏதும் ஏற்படாது இவ்வாறு கூறினார்.