டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், நீரிலிருந்து பசுமை ஹட்ரோஜனை பிரித்து எடுத்து எரிபொருளாக பயன்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது.
ரூ.19,744 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் தனியாரை இணைந்து செயல்பட மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது.
இந்தியாவில் கார்பன் இல்லாத எரிபொருளை ஊக்குவிக்கும் வகையில் தேசிய பசுமை ஹைட்ரோஜன் திட்டத்துக்கு மத்திய அரசு கடந்த புதன்கிழமை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ரூ.19,744 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தின் மூலமாக ரூ.8 லட்சம் கோடி முதலீட்டை ஈர்க்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.
பசுமை ஹட்ரோஜன் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 50 லட்சம் டன் மாற்று எரிபொருட்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. இந்த பசுமை ஹட்ரோஜன் திட்டத்தின் கீழ் எரிபொருள் உற்பத்திக்கான செலவும் குறையும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.
பசுமை ஹைட்ரோஜன் என்பது கார்பன் எனப்படும் கரிபொருள் இல்லாத வாயுவாகும். எரிபொருள் வீணாவது, கசிவு இல்லாத மாற்று எரிபொருள் சக்தியாக உள்ளது இந்த பசுமை ஹட்ரோஜன். இந்த பசுமை ஹட்ரோஜன் மூலமாக வாகனங்கள், இரும்பு ஆலை, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற மிகப்பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் ராட்சத கருவிகளை இயக்க பயன்படும்.
நாம் சாதாரணமாக பயன்படுத்தும் தண்ணீரை வேதியியலில் H2O என்று அழைப்போம். அதாவது 2 ஹட்ரோஜன் மற்றும் ஒரு ஆக்சிஜனின் கலவைதான் தண்ணீர். இந்த தண்ணீரில் உள்ள 2 ஹைட்ரோஜனை பிரித்து எடுப்பதன் மூலம் பசுமை ஹட்ரோஜனை நம்மால் பெற முடியும். சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலம் எலெக்ட்ரோலைசிஸ் என்ற முறைப்படி இதனை பிரித்து எடுக்க முடியும். இதன் மூலம் நீரில் உள்ள ஆக்சிஜனும் தனியாக கிடைத்துவிடும்.
பசுமை ஹட்ரோஜன் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் ரூ.19,744 கோடியில் ரூ.17,490 கோடியை சைட் எனப்படும் பசுமை ஹட்ரோஜன் மாற்றத்திற்காக திட்டங்களை வகுப்பதற்காக ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ரூ.1,466 கோடியை அறிமுக திட்டத்திற்காகவும், ரூ.400 கோடியை ஆய்வு மற்றும் மேம்பாட்டிற்காகவும், ரூ.388 கோடியை இந்த திட்டத்தின் இதர பணிகளுக்காகவும் ஒதுக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு ஆண்டிற்கு 50 லட்சம் மெட்ரிக் டன் பசுமை ஹட்ரோஜன் எரிபொருளை உற்பத்தி செய்ய திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே சொன்னதைபோல் இந்த திட்டத்தின் காரணமாக ரூ.8 லட்சம் கோடி மதிப்பில் இந்தியாவில் முதலீடுகள் கிடைக்கும் என்றும், 2030 ஆம் ஆண்டிற்குள் 6 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் இந்தியாவுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், தொழிற்துறை, எரிசக்தி துறை, போக்குவரத்து துறை போன்றவற்றில் கார்பனுக்கான தேவையை இது குறைக்கிறது. அத்துடன் உள்நாட்டு உற்பத்தி திறன் மேம்படுவதுடன் வேலைவாய்ப்புகள் பெருகும்.
இதன் மூலம் பசுமை ஹட்ரோஜனின் தேவை, உற்பத்தி, ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை ஹைட்ரோஜன் உற்பத்தி செய்வதற்காக இடங்கள் இந்த திட்டங்களின் கீழ் கண்டுபிடிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் தங்களுடன் தனியாரும் பங்குதாரராக இணைந்து செயல்படலாம் என்று மத்திய அரசு விரும்புகிறது.