சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனே நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப் பேரவையில் இன்று தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிகிறார்.
இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. 2ம் நாள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 3வது நாளான நேற்று சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி நேரம், விவாதம் ஆகியவை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருகிறார். 2004ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது அப்போதய பிரதமர் மன்மோகன்சிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வேண்டும், அதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும். சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே இருக்கிறது என்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று முன்மொழியவுள்ளார்.
ராமர் பாலம் இடிப்பு, சுற்றுப்புறசூழல் பாதிப்பு உள்ளிட்ட சர்ச்சைகளால் சேது சமுத்திர திட்டம் தொடர்ந்து கால தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.