டெல்லி அரசின் விளம்பரப் பிரிவான தகவல் மற்றும் விளம்பர இயக்குனரகம் (டி.ஐ.பி), ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற முறையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறும் விளம்பரங்களுக்காக செலவழித்த ரூ.163 கோடியை 10 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
மீட்பு அறிவிப்பு உடனடியாக ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க இடையே அரசியல் மோதலைத் தூண்டியது. ஆம் ஆத்மியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா, தகவல் மற்றும் விளம்பரத்துறை செயலாளர் ஆர் ஆலிஸ் வாஸுக்கு கடிதம் எழுதியுள்ளார், அதில் அந்தத் துறை மீட்டெடுக்க விரும்பும் தொகைக்கான விளம்பரங்களின் நகல்களைக் கோரினார்.
‘பா.ஜ.க கடந்த 7 ஆண்டுகளாக, துணைநிலை ஆளுனர் மூலம் டெல்லி அரசின் அதிகாரத்துவத்தின் மீது அரசியலமைப்பிற்கு விரோதமாக கட்டுப்பாட்டை செலுத்தி வருகிறது. இன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ரூ.163 கோடி செலுத்தக் கோரி, பா.ஜ.க.,வின் அழுத்தத்தின் கீழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆலிஸ் வாஸ் மிரட்டுகிறார்’ என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டினார்.
‘டெல்லியின் குடிமக்களின் மேம்பாட்டிற்கான தரமான வேலையை உறுதி செய்வதற்கு பதிலாக, ஆம் ஆத்மி அரசாங்க அமைச்சர்களை குறிவைக்க டெல்லி அரசின் அதிகாரத்துவத்தை பா.ஜ.க பயன்படுத்துகிறது. அதிகாரிகள் மீது அரசியல் சட்டத்திற்கு விரோதமான கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதன் மூலம் இவை அனைத்தும் செய்யப்படுகின்றன. பா.ஜ., அதிகாரத்துவத்தை தனது கட்டுப்பாட்டின் மூலம் முதலமைச்சருக்கு எதிராக கடிதம் எழுதும்படி வற்புறுத்துகிறது,’ என்று மணீஷ் சிசோடியா கூறினார்.
அரவிந்த் கெஜ்ரிவால், அதிகாரிகள் குடிமக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறார், ஆனால் பா.ஜ.க ‘அவர்கள் தங்கள் வேலையை செய்யாமல், அமைச்சர்களை குறிவைக்கும் வேலையைச் செய்ய மட்டுமே விரும்புகிறார்கள்’ என்று மணீஷ் சிசோடியா கூறினார்.
வடகிழக்கு டெல்லி பா.ஜ.க எம்பி மனோஜ் திவாரி, குடிமக்கள் நலனுக்காக டெல்லிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஆம் ஆத்மி கட்சி கொள்ளையடித்துவிட்டதாக குற்றம் சாட்டினார். ‘இது ஒரு மோசடி. ஆம் ஆத்மி டெல்லி அரசின் விளம்பர ஊழல். ஆம் ஆத்மியின் வங்கிக் கணக்கை உடனடியாக முடக்க வேண்டும் என்று கோருகிறோம். கட்சி தனது சொந்த முகத்தை பிரகாசிக்க அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளது’ என்று மனோஜ் திவாரி குற்றம் சாட்டினார்.
இதில் டெல்லிக்கு வெளியே வெளியிடப்படும் விளம்பரங்கள், ஆம் ஆத்மி கட்சியின் பெயரைக் குறிப்பிடுவது, மற்ற மாநிலங்களில் நடக்கும் சம்பவங்கள் குறித்த முதல்வரின் கருத்துக்களை விளம்பரப்படுத்துவது மற்றும் எதிர்க்கட்சிகளை குறிவைத்து விளம்பரங்கள் ஆகியவை அடங்கும்.
‘மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரூ. 97,14,69,137 அரசு கருவூலத்தில் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. 2022-2023 நிதியாண்டில் மறுமதிப்பீட்டிற்குப் பிறகு, புதுப்பிக்கப்பட்ட தொகை ரூ. 106,42,26,121,’ என்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அதிகாரி ஆலிஸ் வாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அரசு கருவூலத்தில் திருப்பிச் செலுத்தப்படும் தொகை, ரூ. 99.31 கோடி மற்றும் அபராத வட்டி ரூ. 64.30 கோடி. ஆம் ஆத்மி மற்ற விளம்பர நிறுவனங்களுக்கும் ரூ.7.11 கோடி செலுத்த வேண்டும் என ஆலிஸ் வாஸ் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
‘இப்போது, இந்த அறிவிப்பை வெளியிட்ட 10 நாட்களுக்குள், தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான இறுதி வாய்ப்பு இதன் மூலம் வழங்கப்படுகிறது, தவறினால் இந்த விஷயத்தில் சட்டப்படி மேலும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்று அவர் எழுதியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன், 2016 ஆம் ஆண்டு டெல்லி அரசு இந்த விஷயத்தில் தேவையற்ற செலவு மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறி, மூன்று பேர் கொண்ட அரசு விளம்பர உள்ளடக்க ஒழுங்குமுறைக்கான (CCRGA) உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவிடம் புகார் அளித்தார்.
அத்தகைய வகை விளம்பரங்களுக்காகச் செய்யப்படும் முழுச் செலவையும் ஆம் ஆத்மியிடம் இருந்து மாநிலக் கருவூலத்திற்குத் திருப்பிச் செலுத்துமாறு டெல்லி அரசுக்கு அந்தக் குழு உத்தரவிட்டிருந்தது.
ஆம் ஆத்மி கட்சியால் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது, ஆனால் டி.ஐ.பி.,யின் கோரிக்கை அறிவிப்பைத் தொடர்ந்து அது விரைவில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நோட்டீசை எதிர்த்து ஆம் ஆத்மி டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியும் கோரிக்கை உத்தரவுக்கு தடை விதிக்க முடியவில்லை.
டிசம்பர் 21, 2022 அன்று, லெப்டினன்ட் கவர்னர் வினய் குமார் சக்சேனா தலைமைச் செயலாளருக்கு விளம்பரங்களுக்காக அரசு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக தீர்ப்பளித்த CCRGA இன் பரிந்துரைகளை மேற்கோள் காட்டி ஆளும் கட்சியிடமிருந்து ரூ. 97 கோடி ரூபாய் வசூலிக்க அறிவுறுத்தினார். ராஜ் நிவாஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, ரூ. 97 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், ரூ. 54 கோடி நிலுவையிலும் உள்ளது.
2017 ஆம் ஆண்டில் டி.ஐ.பி ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவாலுக்கு ரூ. 42 கோடியை உடனடியாக அரசு கருவூலத்தில் செலுத்தவும், மீதமுள்ள தொகையை 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனங்களுக்கு நேரடியாக செலுத்த வேண்டும் என கூறியதாகவும் ராஜ் நிவாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.