கோவை: மேட்டுப்பாளையம்-காரமடை சாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகில் வளர்ப்பு பிராணிகள் கடை ஒன்று உள்ளது. இங்கு அனுமதியின்றி பவளப்பாறைகள் விற்பனை செய்யப்படுவதாக மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினம் குற்றக்கட்டுப்பாட்டு பிரிவு படையினர் மூலம் மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது கோவை சூலூர் பதுவம்பள்ளி ராயர்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 24) என்பவர் நடத்தி வந்த வளர்ப்பு பிராணிகள் கடையில் பவளப்பாறை இருந்தது தெரியவந்தது. அங்கு அவர் விற்பனை செய்வதற்காக நொறுங்கிய நிலையில் வைத்திருந்த பவளப்பாறை துண்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து வனத்துறையினர் கார்த்திகேயன் மீது வனஉயிரின குற்ற வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.