கடந்த 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டில் 42 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் முர்தாசா ஜாவேத் அப்பாசி அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அந்நாட்டு நாடாளுமன்றத்தில், “பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த 15 பத்திரிகையாளர்கள், சிந்துவை சேர்ந்த 11 பத்திரிகையாளர்கள், கைபர் பக்துன்க்வாவைச் சேர்ந்த 13 பத்திரிகையாளர்கள், பலுசிஸ்தானைச் சேர்ந்த 3 பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவருமே பயங்கரவாதிகளால் குறிவைக்கப்பட்டு, திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் கொலை வழக்கில் இதுவரை 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் தற்போது ஜாமீனில் உள்ளனர். ஏழு பேர் விசாரணையில் உள்ளனர். எட்டு நபர்கள் தப்பியோடினர். நீதிமன்றத்தால் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்த அறிக்கையைத் தயாரித்து இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு பாகிஸ்தானின் உள்துறை மற்றும் தகவல் அமைச்சகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.