மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை பறிப்பு: வாலிபருக்கு 7 ஆண்டு சிறை- மேட்டுப்பாளையம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு..!

கோவை: மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி அழகம்மாள் (வயது 60).

இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வேலைக்காக சத்தியமூர்த்தி நகர் புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க நகைகள் 4 பவுனை பறித்துக்கொண்டு, அழகம்மாளை தாக்கி கீழே தள்ளி விட்டுச்சென்றார்.
இதுகுறித்து அழகம்மாள் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அண்ணா மார்க்கெட் வீதியை சேர்ந்த ஹக்கீம் (35) என்பவர் வழிப்பறியில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது மேட்டுப்பாளையம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து வழக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி நகைகளை பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹக்கீமிற்கு நீதிபதி சிவக்குமார் 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 5ஆயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்தார்.வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக சிவசுரேஷ் வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.