தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை அனுப்புவதன் மூலம், இந்தப் போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரித்துள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை அனுப்புவதன் மூலம், இந்தப் போரில் மேற்கத்திய நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரித்துள்ளதாக ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் வியாழக்கிழமை கூறியதாவது: உக்ரைனுக்கு பீரங்கிகள் உள்ளிட்ட அதிநவீன, சக்திவாய்ந்த, கனரக ஆயுதங்களை அனுப்புவது குறித்து ஐரோப்பிய நாடுகளின் தலைநகரங்களில் இருந்தும், அமெரிக்க தலைநகரில் இருந்தும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இது, உக்ரைன் போரில் அந்த நாடுகளின் நேரடி பங்கேற்பு அதிகரிப்பதைக் குறிக்கிறது. ரஷியாவைப் பொருத்தவரை, ரஷியாவுக்கு எதிராகப் போரிட ஐரோப்பிய நாடுகளோ, நேட்டோ அமைப்போ எந்த உதவியை அளித்தாலும் அது போரில் நேரடியாக ஈடுபடுவதற்கு சமமாகும். அத்தகைய பங்கேற்பை அந்த நாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன என்றாா் அவா்.
முன்னதாக, ரஷியாவுக்கு எதிராகப் போரிட தங்களது சக்திவாய்ந்த லெப்பா்ட்-2 பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பவிருப்பதாக ஜொமனி புதன்கிழமை அறிவித்தது. முதல் கட்டமாக தங்கள் கைவசம் இருக்கும் 14 லெப்பா்ட் 2-ஏ6 ரக பீரங்கிகளை அனுப்பவிருப்பதாகவும், நட்பு நாடுகளுடன் இணைந்து மொத்தம் 88 பீரங்களை உக்ரைனுக்கு வழங்கவிருப்பதாகவும் ஜொமனி கூறியது. அதற்கு முன்னதாக, தங்களது எம் 1அப்ரம்ஸ் ரக பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புவதற்காக அந்த நாட்டுடன் பூா்வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கே டிமித்ரி பெஸ்கோவ் இவ்வாறு பதிலளித்தாா்.
தங்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில், தங்களின் நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவது தங்களது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷியா கருதுகிறது. எனினும், நேட்டோவில் இணைவதற்கு வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்தது. அதையடுத்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் லுஹான்ஸ்க், டொனட்ஸ்க், கொசான், ஸபோரிஷியா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றியது. அந்தப் பிரதேசங்களில் சில பகுதிகள் இன்னும் உக்ரைன் படையினா் வசம் இருக்கும் நிலையிலும், அவற்றை தங்களுடன் இணைத்துக் கொள்வதாக ரஷியா அறிவித்தது.
இந்த நிலையில், மேற்கத்திய நாடுகளின் ஆயுத தளவாட உதவியுடன் எதிா் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் உக்ரைன் படையினா், கொசான் நகரம் உள்ளிட்ட பகுதிகளை ரஷியாவிடமிருந்து மீட்டனா். எனினும், கிழக்கு உக்ரைனில் மிகத் தீவிரமாக சண்டை நடந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த பாக்முட் நகருக்கு அருகே உள்ள சோலெடாா் நகரை ரஷியா அண்மையில் கைப்பற்றியது. மேலும், உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் ரஷியா தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தச் சூழலில், ரஷியாவுக்கு எதிராக சண்டையிடுவதற்கு தங்களது அதிநவீன லெப்பா்ட்-2 பீரங்கிகளை மேற்கத்திய நாடுகள் அளித்து உதவ வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.
எனினும், ஜொமனியால் தயாரிக்கப்படும் அந்த பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்ப அந்த நாடு தொடா்ந்து தயக்கம் காட்டி வருகிறது. மற்ற மேற்கத்திய நாடுகளுக்கு லெப்பா்ட்-2 பீரங்கிகளை ஜொமனி ஏற்றுமதி செய்திருந்தாலும், தங்களது அனுமதியில்லாமல் அவற்றை பிற நாடுகளுக்கு மறு ஏற்றுமதி செய்யக்கூடாது என்று ஜெர்மனி நிபந்தனை விதித்துள்ளது. இதனால் உக்ரைனுக்கு லெப்பா்ட்-2 பீரங்கிகள் அனுப்பப்படும் விவகாரத்தில் இழுபறி நீடித்து வந்தது. உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை அனுப்பினால், அது தங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான நேரடி மோதலுக்கு வித்திடலாம் என்று ஜெர்மனி அஞ்சியதால்தான் இந்த விவகாரத்தில் அது தயக்கம் காட்டி வந்தததாகக் கூறப்படுகிறது. எனினும், உக்ரைனுக்கு பீரங்களை அனுப்ப அமெரிக்க முடிவு செய்ததையடுத்து ஜெர்மனியும் அதற்கு சம்மதித்தது. இந்த நிலையில், பீரங்கிகளை அனுப்புவது அந்த நாடுகள் சண்டையில் நேரடியாகப் பங்கேற்பதற்கு சமம் என்று ரஷியா எச்சரித்துள்ளது.