கோவை சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 41). ஆட்டோ டிரைவர். இவர் அதே பகுதியை சேர்ந்த துணிக்கடை ஊழியர் விஜி என்கிற அந்தோணியம்மாள் என்பவரிடம் ரூ.25 ஆயிரம் கடன் வாங்கினார். அந்த கடனை செந்தில்குமார் இரண்டு தவணைகளாக ரூ. 15 ஆயிரத்தை திருப்பி செலுத்தினார். மீதமுள்ள ரூ. 10 ஆயிரத்தை கொடுப்பதில் செந்தில்குமாருக்கும், அந்தோணியம்மாளுக்கும் பிரச்சினை இருந்து வந்தது.
சம்பவத்தன்று இரவு செந்தில்குமார் ஆட்டோவை வீட்டு முன்பு நிறுத்தி உள்ளே சென்றார். இந்நிலையில் அதிகாலை அவரது ஆட்டோ தீ பிடித்து எரிந்து கொண்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் உடனே செந்தில் குமாரிடம் தெரிவித்தனர்.
அவர் வந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆட்டோவில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தார். இருப்பினும் ஆட்டோ எரிந்து பெரும் சேதமானது. இது குறித்து செந்தில்குமார் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரில் அவர், ஆட்டோவை தீ வைத்து எரித்ததில் அந்தோணியம்மாள் மீது சந்தேகம் உள்ளதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி விஜி என்கிற அந்தோணியம்மாளை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.