இந்தியப் பொருளாதாரம் எதிர்வரும் 2023-24 நிதியாண்டில் 6.5 சதவீதம் வளர்ச்சி காணும்.
நடப்பு நிதியாண்டில் ஜிடிபி 7 சதவீதமாக இருக்கும்.
~ 2022-23 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ஏப்ரல் – டிசம்பர் வரையில் 67 சதவீதம் செலவிடப்பட்டுள்ளது.
~ தனியார் நுகர்வில் விறுவிறுப்பு, அதிக மூலதன செலவினம், நிறுவனங்கள் நிதி நிலையில் வலுப்பாடு, சிறிய வர்த்தகங்களுக்கான கடனளிப்பு அதிகரிப்பு, வேலைச்சூழலுக்கு பணியாளர்கள் மீண்டும் திரும்புவது உள்ளிட்டவை வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.
~ இந்தியப் பொருளாதாரம் உலகளவில் வாங்கும் திறன் சமநிலையில் (பிபிபி) 3 -வது இடத்திலும், செலாவணி மாற்று விகிதத்தில் 5 -வது இடத்திலும் உள்ளது.
~ கரோனா தாக்கத்திலிருந்து இந்தியா மிக வேகமாக மீண்டுள்ளது. உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் மூலதன முதலீடு ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும்.
~ நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் தாண்டி 6.8 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.
~ சரிந்து வரும் ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலான பணியாக மாறியுள்ளது.
~ சர்வதேச அளவில் பொருட்களின் விலை அதிகரித்து வருவதால் நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
நடப்பு கணக்கு பற்றாக்குறை மேலும் உயரும் நிலையில் அது ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
~ நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் ஏற்றுமதி வளர்ச்சி மிதமான அளவிலேயே உள்ளது.
~ வறுமையை போக்குவதில் பிஎம் கிசான், கரீப் கல்யாண் யோஜனா திட்டங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
~ சமூக நலத் திட்டங்களுக்கான மத்திய மற்றும் மாநில அரசுகளின் செலவினம் 2015-16 நிதி ஆண்டில் ரூ.9.1லட்சம் கோடியாக இருந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.21.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
~ நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் மத்திய அரசின் மூலதன செவினம் 63.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
~ அந்நிய முதலீடுகள் வெளியேறிய நிலையிலும், 2022-ல் பங்குச் சந்தை சாதகமான வருவாயை கொடுத்துள்ளது.
~ யுபிஐ வாயிலான பணப் பரிவர்த்தனை மதிப்பின் அடிப்படையில் 121 சதவீதமும், எண்ணிக்கை அடிப்படையில் 115 சதவீதமும் (2019-2022 காலகட்டத்தில்) அதிகரித்துள்ளன.
~ நாட்டின் ஏற்றுமதி 2022 ஏப்ரல்-டிசம்பர் காலத்தில் 33,280 கோடி டாலராக உள்ளது.
~ தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில் 81.4 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
~ மத்திய, மாநில அரசுகள் சுகாதார துறைக்கு செலவிடுவது ஜிடிபியில் 2.1 சதவீதத்தை தொட்டுள்ளது.
~ 220 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
~ 2070-க்குள் சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கான உமிழ்வுகளை பூஜ்யமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
~ வெளிநாடுகளில் வேலைபார்த்து தங்களது தாய்நாட்டுக்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் முன்னிலையில் உள்ளனர். கடந்த 2022-ல் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மிக அதிகளவாக 10,000 கோடி டாலரை தாய்நாட்டுக்கு அனுப்பியுள்ளனர்.
~ உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ) திட்டத்தில் கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ரூ.47,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, அவ்வாண்டுக்கான நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 106 சதவீதம்.
~ பன்முகப் பரிமாண வறுமை குறியீட்டில் கூறியுள்ளபடி 2005-06 மற்றும் 2019-20 ஆண்டுகளுக்கிடையில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
~ இந்தியாவின் மின்-வணிக (இ-காமர்ஸ்) சந்தை 2025 வரை ஆண்டுக்கு 18 சதவீத வளர்ச்சியை தக்க வைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
~ வேளாண் துறையில் தனியார் முதலீடு 2020-21-ம் நிதியாண்டில் 9.3 சதவீதம் அதிகரித்துள்ளது.